சின்னசேலம்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து சில போலி மருத்துவர்கள் கிராமத்தில் உள்ள பெண்களிடம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம் கண்டறிந்து அவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சியில் உள்ள உறவினர்கள் மூலம் பெங்களூரில் இருந்து ஒரு கர்ப்பிணி தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய செம்பாக்குறிச்சிக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் மாவட்ட இணை இயக்குனர் நந்தினி தலைமையிலான மருத்துவ குழுவினர் செம்பாக்குறிச்சிக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் 2 வாலிபர்கள் 2 பேருக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் மருத்துவம் பார்த்த 2 பேரையும் பிடித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், கருவில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறியும் கருவி, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 வாலிபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்த இளையராஜா (36), கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (36) என்பது தெரியவந்தது. இளையராஜா 12ம் வகுப்பு படித்துள்ளதாகவும் மணிவண்ணன் பிஎஸ்சி படித்துள்ளதாகவும், வேலை கிடைக்காததால் இந்த தொழில் செய்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.