மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து 2 பச்சிளங் குழந்தைகள் பலியானது ஏன்?.. பாஜக அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
போபால்: இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மாநில பாஜக அரசை கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில், பிறவிக் குறைபாடுகள் காரணமாக செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண் குழந்தைகள், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் எலிகளால் கொடூரமாகக் கடித்துக் குதறப்பட்டன. விரல்கள் மற்றும் தோள்பட்டைகளில் காயமடைந்த அந்தக் குழந்தைகள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அடுத்தடுத்து உயிரிழந்தன. ஆனால், குழந்தைகளின் இறப்பிற்கு எலிக் கடி அல்ல, பிறவிக் குறைபாடுகளும், ரத்த நச்சுத்தன்மையுமே காரணம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாட்களாக எலிகள் சுற்றித் திரிந்ததாகக் குழந்தைகளின் குடும்பத்தினரும், மருத்துவமனை ஊழியர்களும் குற்றம் சாட்டியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மாநில பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், ‘இந்தச் சம்பவம் கேட்பதற்கே உடலை நடுங்கச் செய்கிறது. மாநில அரசு தனது அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதால், தாய்மார்களின் குழந்தைகள் பறிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகள் உயிர்காக்கும் இடங்களாக இல்லாமல், மரணக் கூடாரங்களாக மாறிவிட்டன.
இதற்காகப் பிரதமரும், மத்தியப் பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதையடுத்து, மாநில முதல்வர் மோகன் யாதவ் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு செவிலியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.