Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வரும் 28ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு விரைவு போக்குவரத்து இயக்குநர் தகவல்

சென்னை: சபரிமலைக்கு வரும் 28ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த 16ம் தேதி முதல் (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்து மற்றும் குளிர் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மேற்படி இயக்கத்தின் தொடர்ச்சியாக ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கரூர் பகுதி வாழ் மக்கள் பயன்பெறும் வகையில் அதி நவீன குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்து வரும் 28ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிசம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை இச்சிறப்பு பேருந்து இயக்கப்பட மாட்டாது. இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும்.

எனவே, பயணிகள் தங்கள் பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. 90 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.