திருவொற்றியூர்: திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் மீனவ கிராமத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.35 கோடி செலவில் 352 மீனவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனால், மீன்பிடி தொழில் செய்யும் தங்களால் மொத்தமாக பங்கீட்டு தொகை கட்ட முடியாது. எனவே வட்டியில்லாமல் மாத தவணையாக பங்களிப்பு தொகையை செலுத்த அனுமதித்து, குடியிருப்பு ஒடுக்கீடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு குடியிருப்புகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடந்தது. அதன்படி ரொக்கமாகவும், வங்கி கடன் கடன் மூலமாகவும் முழுத் தொகையை செலுத்திய 263 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யபட்டது. கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கீதா, கவுன்சிலர் பானுமதிசந்தர் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.