கட்டுக்கடங்காத கூட்டத்தால் 24ம் தேதி வரை சபரிமலையில் தினமும் 75 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வருவதைத் தொடர்ந்து இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தினமும் 75 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வரும் 24ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கையை 5 ஆயிரமாக குறைக்கவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த கடந்த 16ம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். தினமும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் கடந்த 17, 18 தேதிகளில் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் 1 லட்சத்தை தாண்டியது. ஆன்லைனில் இடம் கிடைக்காதவர்களும், முன்பதிவு செய்யாதவர்களும் சபரிமலைக்கு வந்து உடனடி கவுண்டர்களில் பதிவு செய்து தரிசனத்திற்கு வந்தனர். தினமும் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் வந்த வண்ணம் இருந்தனர். சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் 10 மணிநேரத்திற்கு மேல் பம்பையிலும், சன்னிதானம் செல்லும் வழியிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்ததால் பலர் மயக்கமடைந்தனர். தண்ணீர், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதிகளில் 3500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டபோதிலும், நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து அதிவேக அதிரடிப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசாரை சபரிமலைக்கு வரவழைக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் அடங்கிய முதல் குழு நேற்று சபரிமலைக்கு வந்தது.
உடனடியாக இவர்கள் சன்னிதானத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இருந்து வேறொரு குழுவினர் நேற்று இரவு வந்தனர். அரக்கோணத்தில் இருந்து அதிவேக அதிரடிப்படையினரும் சபரிமலைக்கு வருகின்றனர்.
பம்பையில் கடுமையாக நெரிசல் ஏற்படுவதால் இங்கு செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதற்குப் பதிலாக நிலக்கலில் கூடுதலாக 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சபரிமலையில் நெரிசலை கட்டுப்படுத்த வரும் 24ம் தேதி வரை ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தின் தேவசம் போர்டு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
* திரும்பிச் சென்ற பக்தர்களை வரவழைத்து தரிசனம் செய்ய வைத்த போலீஸ்
சபரிமலையில் கடந்த 17, 18 தேதிகளில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் சேலத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். இதேபோல கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் அடங்கிய குழுவினர் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பினர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து அறிந்த சபரிமலை ஒருங்கிணைப்பாளர் ஏடிஜிபி ஸ்ரீஜித் அந்த பக்தர்களை போனில் தொடர்பு கொண்டு மீண்டும் சபரிமலைக்கு வருமாறு கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் சபரிமலை வந்து தரிசனம் செய்தனர்.
* மன்னிப்பு கேட்ட தேவசம் போர்டு தலைவர்
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறியதாவது: மண்டல காலத்தின் தொடக்கத்தில் இந்த அளவுக்கு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. போதிய முன்னேற்பாடுகளை செய்யாதது தவறுதான். தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்ற பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
கேரள உயர் நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வைச் சேர்ந்த நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் கூறுகையில், ‘சபரிமலையில் என்னென்ன செய்ய வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சொன்னது எதுவுமே நடக்காதது ஏன்? மண்டல சீசன் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அனைத்துப் பணிகளையும் தொடங்கி இருக்க வேண்டும். பணிகளில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அளவுக்கு அதிகமான பக்தர்களை அனுமதித்து ஏன்? 4000 பேர் நிற்க வேண்டிய இடத்தில் 20 ஆயிரம் பேரை அனுமதித்தால் என்ன செய்ய முடியும்? நேற்று நடந்தது மிகவும் ஆபத்தான நிகழ்வாகும். சீசனுக்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. நெரிசலை குறைக்க என்ன செய்தீர்கள்? வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


