Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

240 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா காட்பாடியில் விரைவில் அமைகிறது

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைத் திட்டமிடுதல், மேம்படுத்துதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றின் நோக்கத்துடன், தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) 1971ல் நிறுவப்பட்டது. அதன்பின் 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு 40 தொழில் பூங்காக்களாக வளர்ந்து வருகிறது. 16 மாவட்டங்களில் சுமார் 45,000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. தொடர்ந்து தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தொழில் பூங்காக்களும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன‌. அதேபோன்று ஒவ்வொரு சிப்காட் தொழிற்சாலை பூங்காவிற்கும் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

வேலூருக்கு சுற்றுலாப் பயணிகளும், சிகிச்சைக்காக நோயாளிகளும், கல்விக்காக மாணவர்களும் என்று வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் அதிகளவில் வந்து செல்கின்றனர். அந்த வகையில், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக வேலூர் திகழ்ந்தாலும் இந்த மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ இல்லை. இதனால், வேலூர் இளைஞர்கள் படித்து முடித்து விட்டு வேலைவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு உள்பட வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்கிட தொழிற்பேட்டை, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு தொழில்கள் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2022-23க்கான பட்ஜெட்டில் வேலூர், கோவை, மதுரை, பெரம்பலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் பகுதியில் 240 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் கடந்த ஆண்டு இடங்களை தேர்வு செய்தனர். அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டனர்.

போக்குவரத்து, சாலை வசதிகள், தொழிற்பூங்கா அமைத்தல், நிறுவனங்களின் வருகை குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு இடம் மற்றும் சில தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தனியாரிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வழங்க ரூ.40 கோடி நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன், தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் வரும் பட்ஜெட் மானிய கோரிக்கையில் சிப்காட் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது ஆம்பூர் தோல் தொழிற்சாலை, ராணிப்பேட்டை பெல் போன்றவை முக்கிய வேலைவாய்ப்பகமாக இருந்தது. தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்திற்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தை தொழில் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக காட்பாடி தாலுகா மகிமண்டலம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வேலூர் மாவட்டத்திலும் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் காட்பாடி தாலுகா மகிமண்டலம், விண்ணம்பள்ளி, முத்தரிசிகுப்பம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 240 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. தனியார் நிலங்களும் சில இடங்களில் கையகப்படுத்தப்பட்டு அளவீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தனியார் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதற்காக திட்ட மதிப்பீடு ரூ.40 கோடி தயார் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொழிற்பூங்காவில் அனுகு சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்பேட்டை அமைந்தால் இங்கே தொழில் தொடங்கிட ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதன்பிறகு அடிக்கல் நாட்டப்பட்டு 3 மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சாலை அமைக்க திட்ட மதிப்பீடு

சிப்காட் அமைய உள்ள பகுதியில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி காட்பாடி அடுத்த மகிமண்டலம், விண்ணம்பள்ளி, தாதிரெட்டிபல்லி ஆகியவற்றின் வழியாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கம், அனுகு சாலை அமைப்பதற்கான திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத் துறை மற்றும் தொழில்துறையினர் அறிக்கை தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த சிப்காட் அமைய உள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சேர்க்காடு கூட்ரோடு பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மேலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் விரைவுச்சாலையும் அமைந்துள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இன்றி விரைந்து செல்லும் வகையில் இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளது. அந்த சாலைகளுடன் இணைப்பு சாலையும் அமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 20 புதிய பணியிடங்கள் உருவாக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலத்தில் புதிய சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் தாசில்தார், துணை தாசில்தார்கள் உட்பட 20 பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். அதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. இதனால் விரைவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

* காட்பாடியில் 60 ஏக்கரில் புதிய ஐடி பார்க்

எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும், மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஐடி நிறுவனங்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களை விடுத்து கோவை, மதுரை, திருச்சி போன்ற இரண்டாம் கட்ட நகரங்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டன. செலவுகள் குறைவதோடு, இரண்டாம் கட்ட நகரங்களில் குறைவான சம்பளத்திற்கு திறமையான ஊழியர்கள் கிடைப்பதும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர் தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி நிறுவனங்களை தொடங்குவது, வேலைவாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் வேலூர் மேல்மொணவூரில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மேலும் பெரிய ஐடி பார்க் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பெல் தொழிற்சாலை எதிரே 60 ஏக்கரில் புதிய ஐடி பார்க்க அமைய உள்ளது.

இதற்கான இடம் கடந்த 2021ல் வருவாய்த்துறையிடம் இருந்து சிப்காட் பெயரில் மாற்றம் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் புதிய ஐடி பார்க் அமைப்பதற்கான அறிவிப்பு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வேலூர் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊரில் இருந்தே நல்ல ஊதியத்துடன் பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.