Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்த முயற்சி கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்

*சொத்துக்களை முடக்க நடவடிக்கை; கோவை எஸ்பி கார்த்திகேயன் பேட்டி

சூலூர் : கோவை அடுத்த சூலூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடக்க இருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் பகுதி விமான படை தளம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்த போது காரில் இருந்தவர்கள் இறங்க மறுத்து காருடன் தப்பிச்செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை எச்சரிக்கும் வகையில், முன்பக்க கண்ணாடியை உடைத்தவுடன் பயந்து போன காரில் இருந்த டிரைவர் மற்றும் உடன் வந்தவர் கீழே இறங்கினர்.

பின்னர், காரில் நடத்திய சோதனையில் 10 மூட்டைகளில் 235 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வாகனத்தில் வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த வேதமணி (29), தூத்துக்குடியை சேர்ந்த சதீஷ்குமார் (32) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள 235 கிலோ கஞ்சா, சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சூலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை எஸ்பி கார்த்திகேயன் நேற்று முன்தினம் நள்ளிரவில் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்றால் இது போன்ற நடவடிக்கை தொடரும்.

235 கிலோ கஞ்சா பிடிபட்டது, கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்திராத மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் சம்பவம் ஆகும்.

கோவையில் கஞ்சா வேட்டை தொடரும். கல்லூரிகளில் மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின், வாகன சோதனையில் கஞ்சாவை பறிமுதல் செய்த சூலூர் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, சூலூர் எஸ்.ஐ.முருகானந்தம், சுல்தான் பேட்டை எஸ்ஐ மாதவன், தலைமை காவலர் சந்துரு, பன்னீர் செல்வம், செல்லப்பாண்டி, சிங்காரவேலன், வசந்த் ஆகிய தனிப்படை போலீசாரை எஸ்பி கார்த்திகேயன் பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார்.