மபியில் 22 குழந்தைகள் பலி எதிரொலி நாடு முழுவதும் இருமல் மருந்து உற்பத்தி மையங்களில் ஆய்வு: ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு முடிவு
புதுடெல்லி: மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் பலியான நிலையில், நாடு முழுவதும் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு மையங்களில் சோதனை, ஆய்வு, தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) முடிவு செய்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா பகுதியில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிக்கும் சன் மருந்து நிறுவனம் சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளரை மபி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோல்ட்ரிப் மருந்து குடித்ததில் இதுவரை 22 குழந்தைகள் பலியாகி உள்ளன. இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில் டைஎத்திலீன் கிளைகால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தயாரிக்கப்பட்ட மருந்துகளை சந்தைக்கு அனுப்பும் முன்பாக, அவற்றில் சேர்க்கப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களின் தரத்தை சோதிப்பதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்யுமாறு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) நேற்று அறிவுறுத்தியது.
இந்நிலையில், மபி சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் பரிசோதனை நடத்தவும், ஆய்வு செய்யவும், மருந்துகளை தணிக்கை செய்யவும் ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கைக்காக, இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலை வழங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, மருந்து பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தரங்களை பராமரிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட ‘திருத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கை’ வழிகாட்டுதல்களை இதுவரை எந்த மாநிலமும் முழுமையாக பின்பற்றவில்லை என சிடிஎஸ்சிஓ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
* 3 இருமல் மருந்துகள் திரும்ப பெறப்பட்டன
இந்தியாவில் குழந்தைகள் இறப்புடன் தொடர்புடைய இருமல் மருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் (டபிள்யுஎச்ஓ) ஒன்றிய அரசிடம் தகவல் கேட்டறிந்தது. இதற்கு சிடிஎஸ்சிஓ அளித்த பதிலில், ‘‘இதுவரை கோல்ட்ரிப், ரெஸ்பிப்ரெஷ் டிஆர், ரீலைப் ஆகிய 3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்பு கண்டறியப்பட்டு திரும்பப் பெறப்பட்டு்ளன. இவற்றில் எந்த மருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை’’ என கூறப்பட்டுள்ளது.
* எவரையும் விட மாட்டோம்
கோல்ட்ரிப் இருமல் மருந்தை உட்கொண்ட மபியை சேர்ந்த சில குழந்தைகள் நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை பார்க்க மபி முதல்வர் மோகன் யாதவ் நேற்று நாக்பூர் சென்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘குழந்தைகள் உயிருடன் விளையாடும் யாரையும் மபி அரசு தப்பிக்க விடாது. அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.