புதுக்கோட்டை: 3 சிறுமிகளை பலாத்காரம் செய்த ஆசாமிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25 நாளில் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த தொழிலாளி பீர்முகமது (48). 2023 ஜூலை மாதத்தில் 3 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பீர்முகமதுவை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பீர்முகமதுவுக்கு 3 பிரிவுகளில் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் 3 பிரிவு சிறை தண்டனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக குற்றவாளி அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார்.
மேலும் மற்றொரு போக்சோ சட்ட பிரிவின்கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, சட்டவிரோதமாக அடைத்து வைத்த குற்றத்துக்காக தலா ஓராண்டு சிறை தண்டனை, இருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக தலா 2 ஆண்டு சிறை தண்டனை, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் 3 பேருக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து 25 வேலை நாட்களில் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
