பொதுத்துறை நிறுவன சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: அரசு ெபாதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.376.01 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்திய திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்களின் உழைப்பின் பலனாக தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாது, அந்நிய முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமான 9.69 சதவீதம் என்பது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக உயர்ந்ததாகும் என்பதோடு, கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றிருக்கும் மிக உயர்ந்த வளர்ச்சியுமாகும். இந்த வளர்ச்சியை எட்டுவதில் அரசு துறை, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தூண்களாக திகழ்கிறார்கள். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் சக்தியே ஒரு நாட்டை உயர்த்தும் என்பதையும், உற்பத்தியை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் இவர்களின் பங்கு முக்கியமானது என்பதையும் கருத்தில் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024-25ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட் டுள்ளார். திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015ன்படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
1. லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
2. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
3. ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்.
4. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்படும்.
5. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.
6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ3,000 கருணைத்தொகையாக வழங்கப்படும். இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை பெறுவர்.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகையாக வழங்கப்படும். இதுதவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.