புதுடெல்லி: பல்வேறு தொழில்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்வதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 500 முதல் 600 பில்லியன் டாலர்களை அதிகரிக்க முடியும் என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘வளர்ந்த இந்தியாவுக்கான ஏஐ: விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பு’ என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது உலக பொருளாதாரத்தில் 17 முதல் 26 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித துறையில் பெரிய அளவிலான பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன் ஆகியவற்றின் கலவையானது, உலகளாவிய ஏஐ மாற்றத்தில் 10 முதல் 15 சதவீத பங்களிப்பை கைப்பற்றும் திறன் கொண்டது.
தொழில்துறைகள் முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக் கொள்வது 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட 500 பில்லியன் அல்லது 600 பில்லியன் டாலர் அதிகமாக பங்களிக்க கூடும். வளர்ச்சி அடைந்த இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான 8 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கு இந்தியா தனது வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமெனில், புதுமைகள் மூலம் புதிய வளர்ச்சியை உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை. இதில் ஏஐ குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.