சிட்னி: மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் அபாரமாக ஆடிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 121 ரன்கள் சேர்த்தார்.
இதுபோல் முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆன விராட் கோஹ்லி இந்த ஆட்டத்தில் 81 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கூறுகையில், ``கோஹ்லி மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் பேட்டிங் செய்த விதத்தில் சில மாற்றத்தை நான் கண்டேன். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தை அவர் தேவையில்லாமல் தொடவில்லை. அதற்கு பதிலாக அவர் மிட் ஆன் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை அடித்தார். மேலும் பேட்டை நேராக வைத்து அவர் இன்று விளையாடினார். கடந்த 2 ஒருநாள் போட்டிக்கும் இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்தது.
இந்த இன்னிங்ஸ் மூலம் 2027 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கண்டிப்பாக இருவரும் இடம் பெறுவார்கள். நாங்கள் அந்த தொடரில் விளையாட போகிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார்கள். நாங்கள் விளையாட தயார் என்று அவர்கள் நினைத்தால் நிச்சயம் இருவரும் 2027 உலக கோப்பை தொடரில் இடம் பெற வேண்டும். என்னைக் கேட்டால் இன்றைய ஆட்டத்தை பார்த்தவுடன் இந்த இருவரின் பெயரை நேரடியாக உலகக் கோப்பை இந்திய அணியில் எழுதிவிடலாம்’’ என்றார்.
