Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026ம் ஆண்டு தேர்தலிலும் வென்று 2.0 ஆட்சி அமைப்போம் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தும் சதி ஒருபோதும் நிறைவேறாது: இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சேலம்: ஜனநாயக, சமதர்ம, சகோதரத்துவ கொள்கையோடு ஒற்றுமையாக இருக்கும் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த நடக்கும் சதித்திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது என சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் 2வது நாளான நேற்று மாலை, வெல்க ஜனநாயகம் என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். திமுக தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, விழா பேரூரையாற்றினார்.

அவர் பேசியதாவது: நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளநிலையில், கொள்கை உணர்வோடு இந்த மேடையில் நாம் கூடியுள்ளோம். திராவிட பொதுவுடமை மாநாடாகத் தான் நான் இந்த மேடையை பார்க்கிறேன். நமது தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் மேடையில் உள்ளனர். நமது ஒற்றுமை தான், அவர்களின் கண்ணை உறுத்திக் கொண்டுள்ளது. அதிலும், எதிர்க்கட்சித்தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி, கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் பொத்துக் கொண்டு வந்துள்ளது. அடிமைத்தனத்தை பற்றி பழனிசாமி பேசலாமா?. பேசுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது.

மக்களை பொருத்தவரை இங்குள்ள யாருக்கும், யாரும் அடிமை இல்லை. அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்து இருந்த இயக்கம்தான் இங்கு உள்ளவர்கள். திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் கொள்கைகளை பற்றி தெரியாத பழனிசாமி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். அவருக்கு தெரிந்தது அவ்வளவு தான். அதற்காக நம்மோடு கூட்டணியில் உள்ள தலைவர்களை மோசமாக, மிக மிக மோசமாக கொச்சைப்படுத்துவது சரியல்ல. கம்யூனிஸ்ட் தலைவர்களை விட, நீங்கள் என்ன அதிக தியாகம் செய்தவரா?. இல்லை திருமாவளவனை விட தியாகம் செய்தவரா?. இங்குள்ள தலைவர்களை விட தியாகம் செய்துள்ளேன் என்பதை நிரூபிக்க முடியுமா?. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள், இந்த இயக்கங்களில் உள்ளார்கள்.

சாதியவாதம், வகுப்பு வாதம், ஏதாச்சதிகாரத்திற்கு எதிரான ஜனநாயக சக்தியாக ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். ஜனநாயகம், சமதர்மம், சமூகநீதி, சகோதரத்துவம் இதுதான் நம் கடமை. ஜனநாயகத்தை எதிர்க்கின்றவர்கள், இக்கூட்டணியை விரும்பவில்லை. அதனால் எப்படியாவது, நமக்குள் பிளவு ஏற்படுத்த பார்க்கிறார்கள். நான் உறுதியோடு சொல்கிறேன், அவர்களுடைய சதிதிட்டங்கள் ஒருபோதும் நிறைவேறாது. அதனால் தான் இந்த மாநாட்டுக்கு வெல்க ஜனநாயகம் எழுச்சி மாநாடு என பெயர் வைத்துள்ளார்கள்.

ஜனநாயகம் தான் இறுதியில் வெல்லும். அதை வெல்ல வைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனநாயக சக்திகளான நமக்கு உள்ளது. ஒன்றியத்தில் பாஜ அரசு அமைந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாங்கள் சொன்னோமோ, அது இப்பொழுது நடந்து வருகிறது. இந்தி மொழியை கட்டாயமாக்குவது , சமஸ்கிருத மொழியை பின்பற்றுவது, உண்மையாக பட்டப்படிப்பை படிக்காமலேயே, பாரம்பரிய குருகுலத்தில் படித்தவர்கள் ஐஐடி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ரூ.77 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருப்பது நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை முன்னிலைப்படுத்துவார்கள் என்று சொன்னோம். அதை இப்பொழுது நாட்டு மக்களுடன் பேசுகையில், பிரதமரே ஆர்.எஸ்.எஸ். பற்றி பேசியுள்ளார்.

அரசு வெளியிடக்கூடிய விளம்பரத்தில், அண்ணல் காந்திக்கு மேல் சாவார்கர் படம் இடம் பெற்றுள்ளது. இதுதான் இன்றைய அவல நிலை. தங்களுக்கு ஒத்துவராத கட்சிகளை மிரட்டுவார்கள் என்று சொன்னோம். அதுபோலவே தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். இன்றைக்கு அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். உறவினர் வீட்டில் ரெய்டு என்றவுடன், ஓடிச் சென்று சேர நாங்கள் என்ன பழனிசாமியா? எங்களை மிரட்ட நினைத்தவர்கள் தான், மிரண்டு போய் உள்ளனர். இதை விட மோசமான நிலையை பார்த்து, வளர்ந்த இயக்கம் தான் திமுக. எதிர்நீச்சலில் நீந்தியவர்கள் நாங்கள். உங்களுடைய எண்ணம், எந்த காலத்திலும் பலிக்காது.

வழக்கம்போல் தமிழ்நாடு மக்கள், உங்களுக்கு தோல்வி தான் தருவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அரசியல் தெரிந்தவர்கள். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கு உண்மையாக தொண்டாற்றியவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி தத்துவம், மொழி உணர்வு ஆகியவற்றிற்காக உண்மையாக தியாகங்கள் செய்தது யார்? என மக்களுக்கு தெரியும். நவீன தமிழ்நாட்டுக்கு அடித்தளம் அமைத்தது யார்? என்பதும் மக்களுக்கு தெரியும். 2021ல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது போலவே, 2026ம் ஆண்டிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியே இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில், சாதனைகளை செய்வோம்.

அதற்கு துணையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால், எப்படி இருக்கும் என தெரியும். ஜனநாயகம் வெல்ல, களம் காணும் தோழர்களுக்கும் என்னுடைய ரெட் சல்யூட். இந்த ஆட்சியை பொருத்தவரை எல்லா துறைகளிலும் முதலிடம் முதலிடம் என்று நாங்கள் சொல்லவில்லை, ஒன்றியத்தில் இருப்பவர்களே ஆய்வு செய்து இன்றைக்கு அந்த ஆய்வினை வெளியிட்டு வருகிறார்கள். எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான திமுக தலைமை வைக்கும் கூட்டணி மிகப்பெரிய அளவிலேயே வெற்றி பெறும் என உறுதி எடுப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இம்மாநாட்டில் சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம், தவாக தலைவர் வேல்முருகன், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திராவிடர் கழகத்தின் மதிவதினி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பன்னீர்செல்வம், ராஜேந்திரன், மதிவேந்தன், எம்பிக்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், சுப்பராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முரசொலி மாறன் பிறந்த நாள்

முதல்வர் இன்று மரியாதை

இன்று(17ம் தேதி) முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி, காலை 9.15 மணிக்கு அதியமான்கோட்டை அவ்வை வழி ஜங்சன் அருகில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

* தமிழ்நாட்டில் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ‘ஜனநாயகத்திற்கு அடிப்படையான தேர்தலை ஒன்றிய பாஜ அரசு, கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தை தனது கிளை அமைப்பாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. தன்னாட்சி பெற்ற தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்து, ஆட்டும் பொம்மையாக மாற்றி விட்டனர். தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சதி செய்கிறார்கள். தற்போது வாக்காளர் பட்டியலிலும் இந்த சதியை தொடங்கி விட்டனர். இந்த சதியை அம்பலப்படுத்தியுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை பாராட்டுகிறேன்.

சகோதரர் ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், அவரை பிரமாண பத்திரம் கொடுக்க சொல்லி கட்டளை போடுவது சரியா?. தேர்தல் ஆணையத்திற்கு அடிப்படை, வாக்காளர் பட்டியல் தான். அதனை துல்லியமாக தயாரிப்பது தான் தேர்தல் ஆணையத்திற்கு முக்கிய வேலை. அதை கூட தேர்தல் ஆணையம் சரியாக செய்ய முடியவில்லை. விரைவில் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல்கள் தொடங்குவதற்கு முன்பாக சுதந்திரமான , நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து உறுதிப்படுத்த முன் வர வேண்டும்’ என்றார்.