சென்னை: வரும் சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார். தமிழக வெற்றி கழகத்தின் 2வது சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர அரங்கில் நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: சொல்ல முடியாத அளவிற்கு வேதனையிலும், வலியிலும் இவ்வளவு நாள் நாம் இருந்தோம். அப்படிப்பட்ட இந்த சூழலில் நம்முடைய சொந்தங்களின் மனம் பற்றி இருக்க வேண்டியது நம் கடமை. அதனால் தான் இவ்வளவு காலம் மவுனம் காத்து வந்தோம். அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் என நம்மை சுற்றி பின்னப்பட்டது, பரப்பப்பட்டது. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறியத்தான் போகிறோம்.
இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவங்களில் மாபெரும் சக்தியாக நம் கூட நிற்கும் பொழுது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் யார். அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கும் இந்த இடையூறு தற்காலிக இடையூறு மட்டுமே. அதனால் அனைத்தையும் தகர்த்தெறிவோம், மக்களோடும் கைகோர்த்து நிற்போம், மக்களுடன் களத்தில் இருப்போம் நம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பொழுதும் சொல்கிறேன் 2026ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டி. ஒன்று தவெக இன்னொன்று திமுக. இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
* விழுப்புரம் மாவட்ட செயலாளர் மீது 2 பெண் நிர்வாகிகள் புகார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா, மேல் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் பெரியநாயகி ஆகியோர் மாமல்லபுரத்தில் நேற்று நடந்த தவெக பொதுக்குழுவுக்கு வந்தனர். அப்போது நுழைவாயிலில் இருந்த பவுன்சர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி பொதுக்குழுவுக்கான அழைப்பு கடிதத்தை கேட்டனர். ஆனால் அழைப்பு கடிதம் தங்களது மாவட்ட செயலாளரிடம் இருப்பதாகவும், அவர் பொதுக்குழு அரங்கில் இருப்பதாகவும், தங்களை அனுமதிக்க வேண்டும் என்றனர். ஆனால், பவுன்சர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இரண்டு பெண்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெண் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எங்கள் தலைவர் விஜய் எங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கினார். ஆனால் விழுப்புரம் மாவட்ட செயலாளர் குணா சரவணன் எந்த ஒரு காரணமும் சொல்லாமல் பொறுப்பிலிருந்து எங்களை நீக்கிவிட்டார். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், இல்லையென்றால் எங்கள் உயிரை நாங்கள் மாய்த்துக் கொள்வோம்’’ என்றனர்.
