2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும்: டிடிவி தினகரன் பேட்டி
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,
கூட்டணி குறித்து டிசம்பரில் அறிவிப்பு - டிடிவி தினகரன்
அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும். 2024 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராக வேண்டும் என அமமுக நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தது.
2026 தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு இல்லை
2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு கிடையாது. 2024 மக்களவை தேர்தல் வேறு, 2026 சட்டமன்றத் தேர்தல் வேறு.
தே.ஜ. கூட்டணியில் இருந்து விலகுகிறதா அமமுக?
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக நீடிப்பதாக கூறி வந்த டிடிவி தினகரன் திடீரென டிசம்பரில் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலைப் போல் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய முடியாது என்றும் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். அமமுக என்.டி.ஏ. கூட்டணியில் உள்ளதா என்ற கேள்விக்கு நயினார்தான் அதை கூற வேண்டும் என டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இருப்பதாக நயினார் நாகேந்திரனும் பதிலளித்திருந்தார்.
எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க டிடிவி மறுப்பு?
எடப்பாடி பழனிசாமியை கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் மழுப்பல் பதில் தெரிவித்தார். எந்த முடிவாக இருந்தாலும் கட்சியினருடன் ஆலோசித்து டிசம்பரில்தான் அறிவிக்க முடியும் என தெரிவித்தார்.
என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா அமமுக?
அமித் ஷா அறிவிக்கும் முதலமைச்சர் வேட்பாளரை கூட்டணிக் கட்சிகள் ஏற்கும் என கூறி வந்த தினகரன் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஓபிஎஸ்சை தொடர்ந்து தினகரனும் விலகலா?
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறிய நிலையில் தற்போது தினகரனும் பின்வாங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.