Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2014 மக்களவை தேர்தலில் சிஐஏ, மொசாட் சதி தான் காங்.தோல்விக்கு காரணம்: மாஜி எம்பி சர்ச்சை கருத்து

புதுடெல்லி: அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு டெல்லியில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி குமார் கேத்கர் கூறுகையில்,’ 2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் வென்றது. இந்தப் போக்கு தொடர்ந்திருந்தால், 2014ல் காங்கிரஸ் 250 இடங்களை வென்று உறுதியாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், கட்சி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.

அப்போதுதான் ஆட்டம் தொடங்கியது. எந்த சூழ்நிலையிலும், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. காங்கிரசை வீழ்த்தாத வரை, இங்கே (இந்தியாவில்) விளையாட முடியாது என்ற நம்பிக்கையில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்பட்டன. அந்த அமைப்புகளில் ஒன்று சிஐஏ(அமெரிக்க உளவுத்துறை) மற்றொன்று இஸ்ரேலின் மொசாட். ஒரு நிலையான காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசாங்கமோ மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், அவர்களால் இந்தியாவில் தலையிட்டு தங்கள் கொள்கைகளை செயல்படுத்த முடியாது என்பதால் இந்தியாவில் ஒரு சாதகமான அரசாங்கத்தை அந்த நிறுவனங்கள் விரும்பின. எனவே தான் காங்கிரஸ் தலைமையிலான பெரும்பான்மை அரசு அமைய விடவில்லை.

இதற்காக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் பற்றிய விரிவான தரவுகளை மொசாட் விரிவாக தயாரித்தது. சிஐஏ மற்றும் மொசாட் ஆகியவை இந்தியாவில் உள்ள தொகுதிகள் குறித்த விரிவான தரவுகளை இப்போதும் கொண்டுள்ளன. 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக சில ஏமாற்றங்கள் இருந்தபோதிலும், காங்கிரஸ் 206 இடங்களிலிருந்து 44 இடங்களுக்குச் சரிந்ததை ஏற்க முடியாது. மொத்தத்தில் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல’ என்றார்.

தூங்கிக்கொண்டு இருந்தார்களா? பா.ஜ கேள்வி

பாஜ எம்பி சம்பித் பத்ரா கூறுகையில்,’ மொசாட் அல்லது சிஐஏ பாஜ தேர்தல்களில் வெற்றி பெற உதவுவதில்லை. 2014 தேர்தலுக்கு முன்பு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்களா, அல்லது இப்போது வரை கூட தூங்குகிறார்களா? அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் வேலை செய்ததாக அவர்கள் இப்போது கூறுகிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் 2014ல் தோற்றது என்கிறார்கள். மொசாட் அல்லது சிஐஏ பாஜ தேர்தல்களில் வெற்றி பெற உதவுவதில்லை. இந்த நாட்டு மக்கள்தான் தங்கள் வாக்குகளால் நம்மை வெற்றி பெறச் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் செயல்படுகிறது’ என்றார்.