Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை ஆன்லைனில் பெறுவதில் சிக்கல்: எஸ்ஐஆர் பணியில் படிவங்களை நிரப்புவதில் குளறுபடி; ஒரே பெயர் பல முறை வருவது, ஆவணங்களை வைத்திருப்பது, முகவரி மாற்றம் போன்ற குழப்பங்களால் மக்கள் அவதி

சென்னை: இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடந்தது. இதில் பீகாரில் இருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் இன்று முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உள்ளது. 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் 2002, 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2002ம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் பலருடைய பெயர்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பெருநகரங்களில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தேர்தல் ஆணையம் 2005ம் ஆண்டு மேற்கொண்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட 37 தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. அந்தப் பணியை அடிப்படையாகக் கொண்டு, 2005ம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் தான் தமிழகத்தில் 2002, 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்க உள்ளது. அந்த பட்டியல் தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் (https://www.elections.tn.gov.in/ElectoralRolls.aspx) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த இணையதளத்திற்கு சென்று சிறப்பு தீவிர திருத்தம்-2002/2005 வாக்காளர் தேடல் என்ற போர்டலுக்குள் நுழைய வேண்டும். அதில் உள்ளே சென்றதும் இரண்டு மாதிரியான தேடல் என்பது உள்ளது. முதல் தேடலில் பெயரை வைத்து தேடுவது. பெயரை வைத்து தேடுதலில் முதலில் மாவட்டத்தின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்ததாக சட்டசபை தொகுதியை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து வாக்காளர் பெயர், உறவு முறை, வெரிபிகேசன் கோட் போன்றவற்றை உள்ளீடு செய்து செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்காளர் பெயர், வயது, பாலினம், உறவுமுறை, அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை பார்க்க முடியும்.

அதில் இன்னொரு முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடைசியாக மேற்கொண்ட போது இருந்த எஸ்ஐஆர் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது 1.7.2025க்கு முன் உள்ள வாக்காளர் அடையாள அட்டையை உள்ளீடு செய்து பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. பெயர் முறையில் வாக்காளர் விவரங்களை கண்டு பிடிக்கும் முறையில் ஒருவர் பெயரை போட்டு தேடினால், அதாவது ஒருவருடைய பெயர் ரம்யா என்றால் அவரது பெயரில் 100, 150 பெயர்கள் வருகிறது. அதில் ஒருவருடைய பெயரை கண்டுபிடிப்பது என்பது ரொம்ப கடினமாக உள்ளது. அதோடு குறிப்பிட்ட ஒரு வாக்காளரின் விவரம் பல முறை திரும்பத்திரும்ப வருகிறது.

சென்னையில் பூங்கா நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தற்போது இந்த தொகுதிகள் இல்லை. புதிதாக தொகுதிகள் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பழைய பாகம் எண் உள்ளிட்ட அனைத்தும் தற்போது மாறியுள்ளது. அப்படியிருப்பவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிகாரிகள் வழங்கும் படிவத்தில் தற்போது உள்ள தொகுதியை எழுத வேண்டுமா அல்லது பழைய தொகுதியை எழுத வேண்டுமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொகுதி, பாகம் போன்றவையும் மாறியுள்ளது. இதனால், என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் முழுமையாக அறிவிக்கவில்லை.

மேலும், இந்த பட்டியலில் பெயர் இருந்தும் தற்போது உயிருடன் இருப்பவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் உறுதிப் படிவத்தை மட்டும் தான் நிரப்ப முடியும். ஆனால் கடந்த முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே தங்களுடைய பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அடையாள அட்டையை ஆவணமாக கொடுக்கலாம். இந்திய அரசால் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ்கள், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆவணங்களாக அளிக்கலாம்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டிற்கான ஒதுக்கீடு சான்றிதழ், உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேட்டை அளிக்கலாம். தேசிய குடிமக்கள் பதிவேட்டின் சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டையை பொருந்தும் இடங்களில் ஆவணமாக அளிக்கலாம். ஆனால் ஆதாரை பிறப்புச் சான்றிதழாக கருத முடியாது. ஆதார் அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே அளிக்க முடியும். தேர்தல் ஆணையம் அறிவித்த அடையாள ஆவணத்திலும் சிக்கல் உள்ளது. ஒருவர் ஒரு வீட்டில் இருக்கும் போது அவர் தனது பெயர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கலாம்.

வீடு மாறி சென்றாலும் கூட அவர்கள் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை மாற்றாமல், தேர்தல் நடக்கும் போது மட்டும் வாக்களிப்பதை மட்டும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படியிருப்பவர்கள் இந்த சிறப்பு திருத்தத்ததால் மிகவும் பாதிக்கப்படுவர். அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் உள்ள ஆவணத்தை தேர்தல் ஆணையம் ஏற்காது. இதனால், ஆட்டோமெட்டிக்காக ஏற்கனவே இருந்த இடத்தில் உள்ள வாக்காளர் அட்டை நீக்கம் செய்யப்படும் சூழல் உள்ளது. இதே போல பல லட்சம் பேர் உள்ளனர். இதனால், அவர்களின் வாக்காளர் அட்டை நீக்கப்படும்.

ஒரே இடத்தில் காலம், காலமாக இருப்பவர்களுக்கு தான் இந்த நடைமுறை என்பது சாத்தியமாக மட்டுமே இருக்கும். அதுமட்டுமல்லாமல் தேர்தல் ஆணையம் அறிவித்த ஆவணங்களில் பெரும்பாலானவர்களிடம் கல்வி சான்றிதழ் மட்டும் தான் இருக்கும். பிறப்பு சான்றிதழ் என்பது 1-7-1987க்கு பின் தான் கட்டாயமாக்கப்பட்டது. பலரிடமும் பிறப்பு சான்றிதழ் இருக்காது. இதனால், இதனை ஆதாரமாக பெரும்பாலானவர்கள் பயன்படுத்த முடியாது. பாஸ்போர்ட் ஆவணமாக கொடுக்கலாம் என்றால் ஒரு சிலர் தான் பாஸ்போர்ட் வைத்து இருப்பார்கள். பெரும்பாலானோர் பாஸ்போர்ட் வைத்திருக்க வாய்ப்பு இல்லை.

பெரும்பாலானவர்களிடம் ஆதார் அட்டை உள்ளது. ஆனால் ஆதாரை பிறப்புச் சான்றிதழாக கருத முடியாது. ஆதார் அட்டையை அடையாள அட்டையாக மட்டுமே அளிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், சிறப்பு வாக்காளர் பட்டியல் விண்ணப்பித்தல் அளிக்கும் ஆவணத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களை பெரும்பாலானவர்கள் வைக்க முடியாத நிலை உள்ளது. இந்த காரணங்களை காட்டி லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

* 2002, 2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்கு விவரங்களை தரவிறக்கம் செய்து விட்டால் வேறு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. அப்பட்டியல் மட்டுமே போதுமானது.

* அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு, வீட்டு முகவரி மூலமே வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாத அபாயமும் உள்ளது.

* முறையாக நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கு வருகை புரியும்போது சமர்ப்பிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

* 2002, 2005ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் உள்ளது. ஆனால் இத் தளத்தில் பல விவரங்களை பெற முடியவில்லை. குறிப்பாக, தொகுதி சீரமைப்புக்கு முன் உள்ள தொகுதிகளின் விவரங்கள் இதில் கிடைப்பது கடினமாக உள்ளது.

* பெயர், தந்தை பெயர் சரியாக இருந்தாலும், அதுபோல் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்கள் ஒரே மாதிரி வருகின்றன. இதில் எதை தேர்ந்தெடுத்து உள்ளே செல்வது என்று குழப்பமாக உள்ளது.

* அனைத்து வாக்காளர்களும், 4.11.2025 முதல் 04.12.2025 வரையிலான கணக்கீட்டுக் காலத்தில், படிவங்களை நிரப்புவதற்கு தேவைப்பட்டால், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உதவியைப் பெறலாம்.