*63,665 பேருக்கு பயிற்சி வழங்க இலக்கு
தர்மபுரி : புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், தர்மபுரி மாவட்டத்தில் 63,665 பேருக்கு எழுத -படிக்க பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த கல்வி ஆண்டில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதை கடந்தவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காக ஒன்றிய அரசு புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி போதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7,74,303 ஆண்கள், 7,32,540 பெண்கள் என மொத்த மக்கள் தொகை 15,06,843 என்ற அளவில் உள்ளது.
இதில், எழுத்தறிவு பெற்ற ஆண்கள் 76.85 சதவீதமாகவும், பெண்கள் 59.80 சதவீதமாகவும் என மொத்த எழுத்தறிவு பெற்றவர்கள் 68.54 சதவீதமாக உள்ளது. எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத -படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 2023-2024ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்திட்டமானது 2025-2026ம் ஆண்டிலும் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த கற்பித்தல் கற்றல் பணி 2025ம் செப்டம்பர் மாதம் தொடங்கி 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தினமும் 2 மணி நேரம் வீதம் 200 மணி நேரம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் மொழியில் எழுத படிக்கத் தெரியாத மற்றும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை எண்ணறிவைப் பெறாத நபர்கள் 2025 -2026ம் ஆண்டு இக்கணக்கெடுப்பின் வாயிலாக 63,665 பேர் கண்டறிய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஜூன் 15ம் தேதி எழுத படிக்க தெரியாதவர்களுக்கு 997 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். 20 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநர் பொன்.குமாரின் தாயார் ஈஸ்வரி பொன்னுசாமி(75) தர்மபுரி பிடமனேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் கடந்த ஜூன் 15ம் தேதி நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றதையொட்டி மதிப்பெண் சான்றிதழ் நேரில் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் கடந்த 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. தேர்ச்சி முடிவு நேற்று தெரிவிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு 20 ஆயிரம் பேர் கடந்த கல்வி ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கான ரிசல்ட் சமீபத்தில் தான் வந்தது. நடப்பாண்டுக்கு 63,665 எழுத படிக்கத் தெரியாத நபர்களை கண்டறிந்து பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக 2027ம் ஆண்டுக்குள் உருவாக்கும் வகையில் திட்ட கண்காணிப்பு மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.