*நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
துறையூர் : துறையூர் அடுத்த மாராடி ஏரி 20 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள மாராடி, கோட்டப்பாளையம் எல்லையில் அமைந்துள்ள மாராடி ஏரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நேரடி பாசன வசதி வழங்கி வருகிறது.
2018ம் ஆண்டு ஏரியின் மேற்கு பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது கண்டறியப்பட்டபோது, அதை அகற்றுவதில் ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு நீக்கியிருந்தனர்.
மேலும் மாராடி ஏரியில் நடைபெற்று வந்த பெரிய அளவிலான கனிம வள திருட்டும் ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மூலம் வெளிக்கொணரபட்டு தற்போது மணல் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் மீண்டும் அதே பகுதியில் ஆக்கிரமிப்பு முயற்சி நடைபெற்றது.
கோட்டப்பாளையத்தை சேர்ந்த நபர் ஏரியின் சுமார் 2 ஏக்கர் பகுதியை அச்சு திருத்தி விவசாய நிலமாக மாற்ற முயன்றதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பிரதாப் செல்வம் நீர்வளத்துறைக்கு புகார் அளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்த நபரை எச்சரித்தனர்.
பின்னர், ஆக்கிரமித்ததாக கூறப்படும் நபர் அந்த நிலத்தை வாழப்பாடியை சேர்ந்த நபருக்கு விற்றதாகவும், அவர் மீண்டும் நிலத்தை பயிரிடும் நிலமாக மாற்ற முயன்றதாகவும் தெரியவந்தது. அருகிலுள்ள விவசாயிகள் இந்த தகவலை சங்கத்திடம் தெரிவித்ததை தொடர்ந்து, தலைவர் பிரதாப் செல்வம் மறுபடியும் நீர்வளத்துறைக்கு புகார் அளித்தார். நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், தேவையானால் காவல் துறையில் உத்தியோகபூர்வ புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மாராடி ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பதில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜம்பேரி நீரினை பயன்படுத்துவோர் சங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு ஆற்றி வருவதை உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள், பாராட்டி வருகின்றனர். ஏரியின் பாசன வசதி நிலை நிறுத்த பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தனர்.



