சென்னை: கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகினர். இதில், மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவான அவருக்கு அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக கரூர் தவெக நகர செயலாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் கடந்த 14ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர். மதியழகன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜாமீன் பெற்ற இருவரும், கரூரில் இருந்து நேற்று சென்னை வந்து தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அவர்களது குடும்பத்தினரும் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, அவர்களிடம் நேரில் வந்து தன்னால் பார்க்கமுடியவில்லை என விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும், சிறையில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அசம்பாவிதத்திற்கு பின்னர் 19ம் நாளான நேற்று விஜய் தனது கட்சி அலுவலகமான பனையூர் அலுவலகத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.