Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரிக்கு கடத்தப்படவிருந்த மேற்குவங்க சிறார்கள் 18 பேர் மீட்பு: ரயில்வே போலீசார் அதிரடி

ஹவுரா: கன்னியாகுமரிக்கு கடத்தப்படவிருந்த 18 சிறார்களை ஹவுரா ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிரடியாக மீட்டு, கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளனர். ரயில்கள் வழியாக நடைபெறும் ஆள் கடத்தல்களைத் தடுக்கவும், அவர்களை கண்டறியவும் நாடு தழுவிய அளவில் ‘ஆள்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை’ (ஆபரேஷன் ஆஹட்) என்ற சிறப்பு நடவடிக்கையை ரயில்வே பாதுகாப்புப் படை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களைப் பாதுகாப்பதில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 4ம் தேதி, கிழக்கு ரயில்வேயின் ஹவுரா கோட்டத்திற்குட்பட்ட ஹவுரா ரயில் நிலையத்தின் 22வது நடைமேடையில், ஹவுரா தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையினர் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்தனர். அப்போது, 7 சிறுமிகள் மற்றும் 11 சிறுவர்கள் உட்பட 18 சிறார்களை அங்கிருந்து மீட்டனர்.

அவர்களுடன் இருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘ரயிலில் அழைத்து செல்லப்படும் சிறார்களை தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரிக்கு வேலைக்காக அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறினார். அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசார், 18 சிறார்களையும் மீட்டு மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து ஹவுரா ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.