* கேரள முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்பு
மார்த்தாண்டம் : அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17வது மாநில மாநாடு நாளை (24ம் தேதி) துவங்குகிறது. கேரள முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்கிறார். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடக்கிறது.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொது செயலாளர் ராதிகா நேற்று குழித்துறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 17வது மாநில மாநாடு நாளை முதல் 27ம் தேதி வரை, நான்கு நாட்கள் மார்த்தாண்டம் கேகேஎம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
முதல் நாளான நாளை மாலை 4 மணிக்கு, படந்தாலு மூட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி நடக்கிறது.
பேரணியை அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தரராமன் கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பேரணி, திருத்துவபுரம், கல்லுக்கெட்டி, குழித்துறை ஜங்ஷன் வழியாக குழித்துறை வந்தடைகிறது.மாலை 6 மணிக்கு குழித்துறை பொருட்காட்சி திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
மாநில துணை செயலாளர் உஷா பாசி தலைமை வகிக்கிறார். முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ் வரவேற்கிறார். கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் பங்கேற்று பேசுகிறார். இரண்டாவது நாளான 25ம் தேதி, பொது மாநாடு நடக்கிறது. மாநில துணைத்தலைவர் மல்லிகா கொடியேற்றுகிறார்.
மத்திய குழு உறுப்பினர் பொன்னுத்தாய், அகில இந்திய தலைவர் ஸ்ரீமதி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 26ம் தேதி அறிக்கை மீது பிரதிநிதிகள் விவாதம் நடக்கிறது. மதியம் குழு விவாதம் நடக்கிறது. 580 பிரதிநிதிகள் மாநில அளவில் பங்கேற்கின்றனர். 27ம் தேதி மாநாட்டு மலரை அகில இந்திய தலைவர் ஸ்ரீமதி வெளியிடுகிறார். தனலட்சுமி பெற்றுக்கொள்கிறார்.
போதை பழக்கத்தை தடுத்து நிறுத்த, மதுபான கடைகளை குறைக்க வேண்டும். பொதுமக்கள், பெண்கள் நடமாடும் பகுதியில் உள்ள மது கடைகளை மூட வேண்டும். இது குறித்து நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம்.
இந்த மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாதர் சங்க மாநில தலைவர் லாவண்டினா, மாநில துணைச்செயலாளர் உஷா பாசி, முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஜூலியட் மெர்லின் ரூத், குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, லலிதா, ஜெலிலா ராணி ஆகியோர் உடன் இருந்தனர்.