பிலாஸ்பூர்: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனியார் பேருந்து மண்ணில் மூழ்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 6.40 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையின் ஒரு பெரிய பகுதி இடிந்து சாலையில் விழுந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து இதில் சிக்கி மண், பாறைகளில் முழுவதுமாக புதைந்தது. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த சுமார் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நேற்றிரவு மீட்கப்பட்டன. காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக மீட்பு பணிகள் நள்ளிரவு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கியது. அப்போது இடிபாடுகளில் இருந்து ஒரு மேலும் ஒரு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. ஆனால் இறந்த குழந்தை யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 16 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மோப்பநாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கனமான பாறைகள் இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டு வருகின்றது.
நிலச்சரிவினால் பேருந்து புதைந்து 16 பேர் பலியான சம்பவத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஜேபி நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.