புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கல்லூரி பேராசிரியர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த 20 வயது மாணவி அண்மையில் உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டம் பலங்கா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பயாபர் என்ற கிராமம் உள்ளது.
இங்கு ஒரு வீட்டில் இருந்த 15 வயது சிறுமி நேற்று காலை 9 மணிக்கு அதேபகுதியில் உள்ள தன் தோழி வீட்டுக்கு தோட்டப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம இளைஞர்கள் சிலர் சிறுமியை வழி மறித்தனர். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பார்கவி ஆற்றங்கரைக்கு தூக்கி சென்ற இளைஞர்கள் சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 75 சதவீத தீக்காய த்துடன் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.