சென்னை: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர். ஈரானில் இருந்து கப்பலில் துபாய் வந்த மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அப்போது மீன்வர்கள் கூறுகையில், ‘எங்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி. ஈரானில் நாங்கள் இருந்த தீவுக்கு அருகே உள்ள மற்றொரு தீவில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் முயற்சியால் ஈரான் நாட்டில் சிக்கிய 15 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக சென்று பத்திரமாக மீட்டனர். மற்றொரு தீவில் சிக்கிய மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.
Advertisement