சென்னை: அடுத்த ஐந்துஆண்டுக்கு 1580 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய 11 தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வீடு, வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 3.37 கோடி மின் இணைப்புகள் உள்ளன. வீட்டு இணைப்புகள் மட்டும் 2.4 கோடியாகும். தினமும் மின்சார நுகர்வு சராசரியாக 16,000 மெகாவாட்டாக உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில்தான் மின் நுகர்வோர் அதிகளவில் உள்ளது.
இதன் காரணமாக நுகர்வோருக்கு பூர்த்தி செய்யும் அளவிற்கு மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் குறைவாகவே இருப்பதனால் ஒன்றிய மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கு காரணமாக மின்சாரம் என்பது கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அடுத்த ஐந்துஆண்டுக்கு தினசரி 1,500 மெகா வாட் மின்சாரம் என, ஐந்து ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய, மின் வாரியம் சமீபத்தில் ‘டெண்டர்’ கோரி இருந்தது. இதில் தற்போது 11 நிறுவனங்களிடமிருந்து 1580 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மூலம் எடுத்து வருகின்றோம். குறிப்பாக, சூரியஒளி, காற்றாலை மின் உற்பத்தி, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வாங்குதல் என நுகர்வோரின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டிற்கான மின்சார கொள்முதல் செய்யும் வண்ணம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், கோடைக்காலம் போன்ற தேவை அதிகம் உள்ள காலங்களில் நிலையான மின்சாரத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

