புதுடெல்லி: வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு 150வது ஆண்டு கொண்டாட்டத்திலும், அதற்காக மோடி, கார்கே மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டுகளுக்கு முன்பு 1875ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி பங்கிம் சந்திர சாட்டர்ஜி வங்க மொழியில் எழுதினார். அதை பங்கதர்ஷன் இதழில் வெளியிட்டார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அது செய்தித்தாள்கள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாய்மொழி மூலம் இந்தியா முழுவதும் பரவியது. ரவீந்திரநாத் தாகூர் 1896ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில் இதைப் பாடியபோது, இந்தப் பாடல் முதன்முதலில் பொது வெளியில் பாடப்பட்டது.
1905ல் சுதேசி இயக்கம் முதல் 1942ல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஒரு பெரிய ஈர்ப்பு கோஷமாக வந்தே மாதரம் பாடல் மாறியது. இந்த பாடலின் ஈர்ப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், பிரிட்டிஷ் அரசு வந்தே மாதரம் பாடலை பொது வெளியில் பாடுவதை தடை செய்தது. 1937 ஆம் ஆண்டில், தாய்நாட்டின் அழகை விவரிக்கும் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் தீர்மானித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950 ஜனவரி 24 அன்று வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.
கலாச்சார மற்றும் மத பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் அதே வேளையில், அதற்கு தேசிய கீதத்தைப் போலவே மரியாதை வழங்கப்பட வேண்டும். இன்றும் கூட வந்தே மாதரம் பாடல் தேசத்திற்கான பாடலாக, சுதந்திர போராட்டத்தின் துடிப்பாக உள்ளது. அந்த வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. ஆனால் இந்த பாடலை மையமாக வைத்து பா.ஜவும், காங்கிரசும் அரசியல் மோதலை மேற்கொண்டனர். 150வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் டெல்லி இந்திரா காந்தி அரங்கத்தில் நடந்தது.
அதில் நினைவு முத்திரை மற்றும் நாணயத்தையும் வெளியிட்ட பிரதமர் மோடி பேசும் போது,‘வந்தே மாதரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறியது, அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, 1937 ஆம் ஆண்டில், வந்தே மாதரத்தின் முக்கியமான வரிகள் அதன் ஆன்மாவின் ஒரு பகுதி, பிரிக்கப்பட்டன. வந்தே மாதரத்தின் பிரிவும், பிரிவினைக்கான விதைகளை விதைத்தது. தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த மகா மந்திரத்துடன் இந்த அநீதி ஏன் செய்யப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிளவுபடுத்தும் மனநிலை இன்னும் நாட்டிற்கு ஒரு சவாலாக உள்ளது. வந்தே மாதரம் ஒவ்வொரு சகாப்தத்திற்கும் பொருத்தமானது. எதிரி பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி நமது பாதுகாப்பையும் மரியாதையையும் தாக்கத் துணிந்தபோது, இந்தியா துர்க்கையின் வடிவத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை உலகம் கண்டது. ஆனால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் இந்தப் பாடலை மதத்துடன் இணைப்பதன் மூலம் வரலாற்றுப் பாவத்தையும், தவறுகளையும் செய்தது. நேருவின் கீழ் காங்கிரஸ், மதக் காரணங்களைக் கூறி, துர்கா தேவியை போற்றும் வந்தே மாதரத்தின் சரணங்களை வேண்டுமென்றே நீக்கியது’ என்றார்.
பிரதமர் மோடி பேச்சுக்கு பதிலடியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,‘வந்தே மாதரம் பாடல் நாட்டின் கூட்டு ஆன்மாவை விழிப்படையச் செய்து சுதந்திரத்திற்கான பேரணியாக மாறியது. அதே நேரத்தில் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை இந்த பாடலை ஏற்றுக்கொள் மறுத்தன. அவர்களது அலுவலகங்களில் வந்தே மாதரம் அல்லது தேசிய கீதமான ஜன கண மன பாடலை ஒருபோதும் பாடியதில்லை. மத, சாதி மற்றும் பிராந்திய அடையாளங்களைக் கையாளும் பிரிட்டிஷ் பேரரசின் பிரித்தாளும் கொள்கை இந்தியாவின் ஒற்றுமையை உடைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் புரிந்துகொண்டது.
இதற்கு எதிராக, ‘வந்தே மாதரம்’ என்பது பாரத மாதா மீதான பக்தியில் அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்து, தளராத வலிமையின் பாடலாக உயர்ந்தது. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையிலிருந்து நாட்டின் துணிச்சலான புரட்சியாளர்களின் இறுதி மூச்சு வரை, வந்தே மாதரம் கோஷம் நாடு முழுவதும் எதிரொலித்தது. அதன் பிரபலத்தால் பீதியடைந்த ஆங்கிலேயர்கள் அதைத் தடை செய்தனர். ஏனெனில் அது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இதயத் துடிப்பாக மாறியது.
இன்று தேசத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்பவர்கள் ‘வந்தே மாதரம்’ அல்லது நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு பதில் ‘நமஸ்தே சதா வத்சலே’ பாடலைப் பாடுகிறார்கள், இது தேசத்தை அல்ல, அவர்களின் அமைப்புகளைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல். 1925ல் நிறுவப்பட்டதிலிருந்து, ஆர்எஸ்எஸ் அதன் உலகளாவிய மரியாதை இருந்தபோதிலும் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தவிர்த்து வருகிறது. அதன் நூல்களிலோ அல்லது இலக்கியங்களிலோ ஒரு முறை கூட அந்தப் பாடல் குறிப்பிடப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் இந்தியாவின் அழியாத ஆன்மாவின் குரலான ‘வந்தே மாதரம்’ மீதான தனது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டார்.
* நீக்கியது ரவீந்திரநாத் தாகூர் மன்னிப்பு கேட்பாரா மோடி?
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’ 1937 ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை ரவீந்திரநாத் தாகூரின் பரிந்துரைகளை ஏற்றே நீக்கப்பட்டது. பொய்களை மட்டுமே பேசும் ஒருவரின் அவமானகரமான அறிக்கை தான் இந்த குற்றச்சாட்டு. பிரதமர் மோடியிடம் இந்திய மக்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறார்கள்’ என்று கூறி இதுதொடர்பான ஆதாரங்களையும் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளார்.

