இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில சிறப்பு மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநாட்டில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டவுடன் இறை அன்பர்களுக்கு எதிரான ஆட்சி, ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற பிம்பத்தை கட்டமைக்க பார்த்தார்கள். அந்த பிம்பத்தை அடித்து சுக்கு நூறாக்கி இது திராவிட மாடல் ஆட்சி, எல்லோருக்குமான ஆட்சி என்று நிரூபித்து காட்டிய பெருமை நமது முதல்வர் என்றால் அது மிகையாகாது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா என்ற கொடிய நோய் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த வேளையில், கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது முதல் கோப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு அர்ச்சகர்களுக்கும் ரூ.4000 கொரோனா ஊக்கத் தொகையாகவும், ஒரு மாதம் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்து சுமார் 46 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 12 பெண் ஓதுவார்கள், பெரியாரின் கனவை நினைவாக்கிய பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினை சேரும். திமுக ஆட்சி அமைந்து 3,707 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ.8000 கோடி மதிப்புள்ள 10,000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1502 கோடி உபயதாரர் நிதி கோவில்களுக்கு வந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வரும் 1500 பேர் பிப்ரவரி மாதத்திற்குள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். திராவிட மாடல் ஆட்சியில் இறைவனும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இறைவனுக்கு தொண்டு செய்யும் அர்ச்சகர்களும், இறைவனுக்கு வேலை செய்யும் ஊழியர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.