தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கரன் தகவல்
கடலூர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் கடலூரில் நேற்று அளித்த பேட்டி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி திருநாள் முடிந்து, அதன் பிறகு 3 நாட்கள் அவரவர்கள் சொந்த ஊர்களில் இருந்து பணி இடங்களுக்கு செல்வதற்கும் கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு போல தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்து 2,900 பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுகிறது. வரும் வியாழன் முதல் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 800 முதல் 1,500 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல தீபாவளி முடிந்த பிறகு சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருபவர்கள் அல்லது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கும் கூடுதல் பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 20 வால்வோ பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வாரம் கூட பெங்களூருக்கு சென்று சொகுசு பேருந்துகளை ஆய்வு செய்துள்ளோம். டிசம்பர் மாதத்திற்குள் சொகுசு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம். மேலும் 11 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டு கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 பேர் பணிக்கு எடுத்துள்ளோம். இப்போது 8 போக்குவரத்திற்கும் சேர்த்து 3200 பேர் பணிக்கு எடுப்பதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.