*தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை
*உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கடையம் : கடனா அணை அடிவாரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் அறுவடைக்கு தயாரான 150 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. இதுதொடர்பாக தகவல் தெரிவித்தும் ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சம்பன்குளம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு நெல், சிறு கிழங்கு உள்ளிட்டவற்றை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு விதை நெல், உரம் என சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து கார் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அறுவடைக்கு தயாராகி வரும் நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 150 ஏக்கரில் கருகியுள்ளது. கடனா அணையில் இருந்து சம்பன்குளத்திற்கு நீர்வரும் வடகுருவபத்து கால்வாய் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுவதாலும், குளம் தூர்வாரப்படாமல் மணல் நிரம்பி இருப்பதாலும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைப்பதில்லை என இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிப்படைந்த விவசாயிகள், கருகிய பயிர்களை வருவாய் மற்றும் வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மனுக்கள் வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரியும் கருகிய நெற்பயிர்களை ஆய்வு செய்ய வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்குவதோடு, இனி வரும் காலத்தில் இப்பிரச்னை ஏற்படாமல் கடனா அணையில் இருந்து வரும் வடகுருவ பத்து கால்வாயை சீரமைத்தும், சம்பன்குளத்தை முறையாக தூர்வாரி நீரினை சேமித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.