ஆற்காடு : ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரில் கி.பி.14ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு மற்றும் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை, மரத்துண்டு ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் ஞானக்கொல்லிமேடு பகுதியில் பழங்கால கல்வெட்டு மற்றும் பெருங்கால்மேடு பகுதியில் பழமையான மண் பானை ஆகியன இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தொடர்ந்து, ஆற்காடு தாசில்தார் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் ராமு, விஏஓக்கள் ராஜேஷ், முத்துக்குமார், வெங்கடேசன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள பாலாற்றில் கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு கி.பி.14ம் நூற்றாண்டை சேர்ந்தது என கூறப்படுகிறது. அதேபோல், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கால்மேடு பகுதியில் உள்ள பாலாற்றில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்பானை மற்றும் மரத்துண்டு ஆகியன கிடைத்துள்ளது. அவற்றை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளார்.
தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று அந்த பழங்கால பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து, பழங்கால கல்வெட்டு, மண்பானை மற்றும் மரத்துண்டு ஆகியவற்றை ஆற்காடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த பழங்கால பொருட்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். ஏற்கனவே சக்கரமல்லூர் கலங்கல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மாதம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.