மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு 14 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதற்கு ஒன்றிய அரசு ஒரு வாரத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவர்களது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டார். இந்த நியமனங்களுக்கான அனைத்து செயல்முறைகளும் விரைவாக முடிக்கப்பட்டு, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 14 புதிய நீதிபதிகளும் பதவியேற்றுக்கொண்டனர். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஒரே நேரத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் பதவியேற்பது மும்பை உயர் நீதிமன்ற வரலாற்றில் அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய நியமனங்களின் மூலம், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட 94 என்ற எண்ணிக்கையை விட 12 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. பதவியேற்றவர்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயின் உறவினரான ராஜ் வகோடேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே பெண் நீதிபதியான வைஷாலி பாட்டீல்-ஜாதவ் நியமனத்தின் மூலம், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகளில் பலர் மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்.ஐ.ஏ. ஆகியவற்றின் சார்பில் வழக்குகளில் ஆஜரான அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.