Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

144 தடை உத்தரவை ரத்து செய்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி மலை மீது ஏற முயன்ற நயினார், பாஜவினர் கைது : பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற உத்தரவை நிறைவேற்றாததை எதிர்த்து, ராம.ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வீடியோ கான்பரசின்சில் ஆஜராகி, ‘‘திருப்பரங்குன்றத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை காரணமாக 163 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘நீதிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற தனிநபருக்கு மரியாதை அளிக்க வேண்டாம். கலெக்டர் தடை உத்தரவால் அனுமதிக்கவில்லை என கமிஷனர் கூறுகிறார். நீதிமன்ற உத்தரவை விட கலெக்டரின் உத்தரவே மேலானது என நினைத்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்துள்ளனர். இந்த வழக்கை அரசு உணர்வுபூர்வமாக கையாண்டிருக்கலாம். எனவே, திருப்பரங்குன்றத்தில் 163 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மாலை 6.30 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்.

மனுதாரர்கள் ராம.ரவிகுமார், பரமசிவம், அரசு பாண்டி உள்ளிட்ட 4 பேருடன் மேலும் 6 பேர் என 10 பேர் மலைக்கு சென்று தீபம் ஏற்றலாம்இதற்கு மதுரை போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை இன்று இரவு 10.30 மணிக்குள் (நேற்றிரவு) மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதையடுத்து மனுதாரர் உள்ளிட்ட 10 பேரும் திருப்பரங்குன்றம் கிளம்பிச் சென்றனர். அவர்கள் தீபம் ஏற்ற தயாராக இருந்த நிலையில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, அமர் பிரசாத் ரெட்டி மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜவினர், இந்து முன்னணியினர் தாங்களும் மலை மீது செல்ல வேண்டும் என்று கூறி பழநியாண்டவர் கோயில் அருகே திரண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தனி நீதிபதி தடையுத்தரவை விலக்கிக் கொண்ட உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. எனவே, அனுமதிக்க முடியாது என கூறி தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருடன் பாஜவினர், இந்து முன்னணியினர் கடும் வாக்குவாதம் செய்து மலை ஏற முயற்சித்ததால் இருதரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது,அங்கிருந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜவினர் என நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வேன்களில் ஏற்றிச் சென்று திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்க போலீசார் முயன்றனர். அப்போது, திடீரென ஒரு பெரும் கும்பல் கைதானவர்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை மறித்ததுடன், அந்த தனியார் மண்டபம் முன்பாகவும் அமர்ந்து கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினர் சந்தித்து பேசினர். மேலும், நயினார், எச்.

ராஜாவிடம் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசினார். அங்கு தொடர்ந்து, பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நயினார் கைதை கண்டித்து நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட பாஜ எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

* கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஐகோர்ட் கிளை உத்தரவின்படி, மலை மீதுள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென பாஜ, இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் போராடினர். மேலும், பழனியாண்டவர் கோயில் அருகே ஐஜி வந்த காரை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் அமைத்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் மலை மீது ஏறிச்சென்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, திருப்பரங்குன்றம் நகரில் தடை உத்தரவை கலெக்டர் பிரவீன்குமார் பிறப்பித்தார்.

போலீசாரின் தடுப்புகளை கடந்து செல்ல முயற்சி செய்ததுடன், அங்கு கலவரத்தில் ஈடுபட்ட பாஜ மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த 20 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின் ரகுநாத், திருமலை, விக்கி, முத்துமுருகன், நாகராஜ், சத்யமூர்த்தி, விக்னேஷ், தினேஷ்குமார், தமிழரசு, பாலகிருஷ்ணன், மணிகண்டன், சீனிவாசன் ஆகிய 12 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

* நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும்: நயினார்

நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் அதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும். இதுதான் எங்களின் கோரிக்கை. மேல்முறையீடு செய்வது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. காவல்துறை நீதிபதிகளின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். இது முதல் படை வீடு. எல்லா முருக பக்தர்களும் வீரவேல் வெற்றிவேல் என்று சொல்கிறார்கள். இமயமலைக்கு நிகரானது இந்த இடம் என்று பரிபாடலில் சொல்லப்பட்டுள்ளது’’ என்றார்.