Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய 13 வயசு பொடியன்!

சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணியுடன் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெறும் முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா யு-19 தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசி உலக சாதனை படைத்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. யு-19 முதல் இன்னிங்சில் 293 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 103 ரன் எடுத்திருந்தது. விகான் மல்கோத்ரா 21 ரன், வைபவ் சூர்யவன்ஷி 81 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.இருவரும் முதல் விக்கெட்டுக்கு 133 ரன் சேர்த்தனர்.

தனது முதல் சர்வதேச ஆட்டத்திலேயே 58 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்த சூர்யவன்ஷி 104 ரன் (62 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டானார். மல்கோத்ரா 76 ரன்னில் (108 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். கேப்டன் பட்வர்தன் 33, அபிக்யான் 32, நிகில் குமார் 20 ரன் எடுக்க, இந்தியா யு-19 முதல் இன்னிங்சில் 296 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. 3 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. யு-19 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்துள்ளது.

சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ள சூர்யவன்ஷியின் வயது 13 தான். பீகாரைச் சேர்ந்த இவர், சர்வதேச யு-19 போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் (13 ஆண்டு, 188 நாள்) சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக, வங்கதேசத்தின் இப்போதைய கேப்டன் நஜ்மல் உசைன் ஷான்டோ, 2013ல் யு-19 அணியில் இலங்கைக்கு எதிராக விளையாடியபோது (14 வயது, 281 நாள்) சதம் விளாசி இருந்தார். குறைந்த பந்துகளில் சதம் விளாசிய யு-19 வீரர் பட்டியலில் இங்கிலாந்தின் மொயீன் அலி உள்ளார் (2005, 56 பந்து). விராத் கோஹ்லி 2007ல் இலங்கைக்கு எதிராக விளையாடிய போட்டியில் 51 பந்தில் 94* ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 ஆஸி யு-19 அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை பூர்வீகமாக கொண்ட விஸ்வா ராம்குமார் (18 வயது), முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார்.