Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஐடி பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

சென்னை: வி.ஐ.டி சென்னை பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, வி.ஐ.டி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.ஐ.டி பல்கலைகழகத்தின் துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கவுரவ விருந்தினராக சென்னையில் உள்ள வங்கதேச நாட்டின் துணை தூதரகத்தின் துணை தூதர் ஷெல்லி சலேஹின் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், 39 மாணவ - மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் உள்பட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டினார்.

விழாவில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ``தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் லட்சக்கணக்காண பெண்கள் வேலை செய்கிறார்கள். கல்வி என்பது ஒரு மனிதனை நாகரீகமாகவும் ஆக்க வேண்டும். தற்போது வேலை மற்றும் திறனை மேம்படுத்துவது மட்டுமே கல்வியாக இருக்கிறது, அதை சற்று மாற்ற வேண்டும். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சட்டம், வரலாறு, இலக்கியம் போன்ற துறைகள் இருப்பது மிக முக்கியம். நம் வாழ்வில் எந்த வெற்றியும் நிரந்தரமல்ல, எந்த தோல்வியும் ஈடுசெய்ய முடியாதது அல்ல. எனவே, மாணவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியை பெற்றாலும் பணிவுடன் இருக்க வேண்டும். தோல்வி அடைந்தாலும் துவண்டு போகக் கூடாது’’ என்றார். வி.ஐ.டி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ``உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 27% மட்டுமே.

அது 50% ஆக உயர வேண்டும். உயர்கல்வி மூலம் மட்டுமே 2047-க்குள் இந்தியா உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்க முடியும். உயர்கல்வியில் இந்தியாவின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 28 சதவீதமாக உள்ளது. கல்விக்கு 2.5 சதவிகிதம் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2 சதவீத மக்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள், அதே நேரத்தில் ஜப்பானில் 57 சதவிகிதம் பேர் வருமான வரி செலுத்துகிறார்கள், அமெரிக்காவில் 43 சதவிகிதம் பேர் வருமான வரி செலுத்துகிறார்கள், சீனாவில் 10 சதவிகிதம் பேர் வருமான வரி செலுத்துகிறார்கள். இந்தியாவில் தனிநபர் வருமானம் 2800 டாலர்கள் அல்லது 2900 டாலர்கள் மட்டுமே, ஆனால் அமெரிக்காவில் இது 89000 டாலர்கள் மற்றும் ஜப்பானில் 36000 டாலர்கள் மாணவர்கள் இந்தியாவில் முதலீடு செய்து நிறுவனங்களைத் தொடங்குங்கள், அப்போதுதான் இந்தியா வளர்ந்த பொருளாதார நாடாக மாறும்’’ என்றார்.

இந்த, பட்டமளிப்பு விழாவில் 6,468 இளங்கலை, முதுகலை மாணவ - மாணவிகள், 113 ஆராய்ச்சி மாணவ - மாணவிகள் என மொத்தம் 6,581 மாணவ - மாணவிகள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்தது. நிகழ்ச்சியில் வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூர் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.