Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 1,303 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல்: கடந்தாண்டை விட 21% அதிகரிப்பு

சென்னை: நீலகிரி வரையாடு இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி வரையாடு திட்டம் என்பது தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் முதல்வரால் அக்டோபர் 12, 2023 அன்று ரூ.25.14 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு, மேலாண்மை, அதன் வாழ்விட மதிப்பீடு, நவீன தொழில்நுட்ப பயன்பாடு, சர்வதேச தரத்திற்கு இணையாக பல்வேறு அறிவியல் வழிமுறைகளை பின்பற்றுதல், திட்டத்தில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களை ஈடுபடுத்துதல் ஆகிய வெவ்வேறு கூறுகள் உள்ளன.

நீலகிரி வரையாடு திட்டத்தின் முக்கிய செயல்பாடு வருடாந்திர ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு ஆகும். இத்திட்டத்தின், முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 140 வாழ்விடப் பகுதிகள் மற்றும் கேரளாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுடன் சேர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. தற்போது இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு 14 வனக்கோட்டங்களில், 177 வரையாடு வாழ்விடப் பகுதிகளில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 முதல் 27, 2025 வரை நான்கு நாட்களுக்கு நடத்தப்பட்டது. நீலகிரி வரையாடு குட்டிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பிறக்கின்றன, எனவே தாய் மற்றும் குட்டிகள் இரண்டையும் காணும் வகையில் காலத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார். சுப்ரியா சாகு, அரசு கூடுதல் தலைமைச் செயளாலர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, நீலகிரி வரையாடு பற்றிய முக்கிய உரையாற்றினார். மேலும், ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் வரவேற்புரையாற்றினார். யாஷ் வீர் பட்நாகர் –IUCN இந்திய பிரதிநிதி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் அறிக்கையின் முக்கிய அம்சங்களை அவையோருக்கு எடுத்துரைத்தார்.

வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளின் முக்கியத்துவம் மற்றும் நீர்வள ஆதாரங்களில் வரையாடுகளின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். வரையாடு திட்டத்திற்காக பன்னாட்டு மற்றும் தேசியாளவில் உள்ள அறிவியல் அறிஞர்கள் கொண்ட அறிவியல்குழு அமைத்து அரசானை வெளியுட்டுள்ளது என தெரிவித்தார். இக்குழு இத்திட்டதினை உலகளாவிய அறிவியல் முறையில் செயல்படுத்த உறுதுணையாக இருக்கும். மேலும் வரையாடுகளை பாதுகாப்பது வனத்துறையினரின் பணிமட்டும் அன்று, மக்களின் தலையாய கடைமையும் ஆகும் என தலைமையுரையாற்றினார். சுப்ரியா சாகு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அவர்கள் கோயம்புத்தூரில் வரையாடு பாதுகாப்பு மையம் நடைமுறைபடுத்துவதற்கு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கபட்டுள்ளது.

அதற்கான நிலம் ஒதுக்கப்பட்டு அரசானை வெளிடபட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் வரையாடுகளின் குறிப்புகள் பற்றியும், இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பின் முக்கியத்துவம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நீலகிரி வரையாடுகளின் பாதுகாப்பு பற்றியும் எடுத்துரைத்தார். ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்(வனத்துறை தலைவர்) இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு முறை மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாடுகளை பற்றி விளக்கினார். ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் காப்பினப்பெருக்கம் (Captive Breeding) மேற்கொள்ள தேவையான சாத்தியக்கூறுகளை பற்றி விளக்கினார். மா.கோ.கணேசன், நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் நன்றியுரை ஆற்றினார்.

இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள்

* இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் ஒருங்கிணைந்து அறிக்கை வெளியிட்டது. இந்நிகழ்வில் கேரளா வனத்துறை மற்றும் வன உயிரின பாதுகாப்பு அமைச்சர் A.K. சசீந்திரன், இணைய வழி மூலமாக பங்கேற்றார். மேலும் கேரளா மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் பிரமோத் ஜி கிருஷ்ணன், IFS, APCCF & CWLW அவர்கள் இணைய வழி மூலம் பங்கேற்றார்.

* இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் 177 வரையாடு வாழ்விட பகுதிகளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 2024-ஐ விட 36 பகுதிகள் கூடுதல் கணக்கெடுப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளன.

* இந்த ஆண்டு கொடைக்கானல் வனக்கோட்டம் புதிதாக கணக்கெடுப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளது. இது நீலகிரி வரையாடுகளுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க பகுதி மற்றும் ஐபெக்ஸ் (Ibex) மலைகள் இந்த வனக்கோட்டத்தின் கீழ் வருகிறது.

* இரண்டாவது ஒருங்கிணைந்த வரையாடு கணக்கெடுப்பிற்க்கான பகுதிகளுக்கு ஒரு விரிவான தரவுத்தாள் வடிவமைக்கப்பட்டு, துண்டாக்கப்பட்ட வாழிடப்பகுதிகளில் எல்லைக்குட்பட்ட கணக்கெடுப்பு முறை பின்பற்றப்பட்டது. கேரளா வனப் பகுதியுடன் இணைந்த பெரிய தொடர்ச்சியான நிலப்பரப்பில் எல்லைக்குட்பட்ட கணக்கெடுப்பு மற்றும் இரட்டை பார்வையாளர் முறை ஆகிய இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் வரையாடு மற்றும் ஊன் உண்ணிகளின் மாதிரி சேகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் மதிப்பீடு செய்யப்பட்டது. இதற்கான தேவையான தரவுத்தாள்கள் அச்சிடப்பட்டு அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.

* இந்த ஆண்டு மொத்தமாக 315 (நீலகிரி வரையாடுகளின் புழுக்கைகள்-271, ஊண் உண்ணிகளின் எச்சம் மாதிரிகள்-44) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஒட்டுண்ணி தொற்றுக்கான ஆராய்ச்சிகாக சமர்பிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* ஏப்ரல், 2025 (15 முதல் 20 வரை) 14 வரையாடு வாழ்விட வனக்கோட்டங்களில் களப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

* இந்த ஆண்டு கணக்கெடுப்பில், உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC)-தமிழ்நாடு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)-இந்தியா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)-தமிழ்நாடு மற்றும் இயற்க்கைகான உலகலாவிய நிதியம் (WWF)-இந்தியா போன்ற நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்றனர்.

* இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் அச்சுறுத்தல் மதிப்பீடு என்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும், இது நீலகிரி வரையாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் பிறகாரணிகளை மதிப்பிடுகிறது.

* தமிழ்நாட்டில் தெற்கே உள்ள கணக்கெடுப்புப் பகுதிகளில் கன்னியாகுமரி வனக்கோட்டத்திலுள்ள தச்சமலை வாழிடம் (902 மீ கடல் மட்ட உயரம்) ஆகும். வடக்கில் உள்ள கணக்கெடுப்புப் பகுதிகளில் கூடலூர் வனக்கோட்டத்திலுள்ள ஓவேலி வனச்சரகம், தவளமலை வாழிடம் (986 மீ கடல் மட்ட உயரம்) ஆகும்.

* இந்த கணக்கெடுப்பின் போது களப்பணியாளர்களால் நடைப்பயணமாக, கடந்த மொத்த தூரம் 3126 கி.மீ.ஆகும்.

தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் மொத்த மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 1303 ஆகும். இவற்றில், 163 துண்டாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாழிடங்களில் மொத்த எண்ணிக்கை 687 மற்றும் 14 பெரிய தொடர்ச்சியான நிலப்பரப்பில் உள்ள வரையாடுகளின் எண்ணிக்கை 616 ஆகும். இக்கணக்கெடுப்பில் 36 புதிய வாழ்விடங்கள் எண்ணிக்கை சேர்த்து மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிக்கையில் 42% ஆனைமலை புலிகள் காப்பகம் கொண்டுள்ளன, அதே நேரத்தில் நீலகிரி நிலப்பரப்பு 30% எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, இது கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்கா ஆகிய இரண்டு நன்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையிலான வரையாடுகளின் இருப்பை பிரதிபலிக்கிறது.

கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்காவில் மதிப்பிடப்பட்ட நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 334. இதேபோல், முக்கூர்த்தி தேசிய பூங்காவில் மதிப்பிடப்பட்ட நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 282 ஆகும்.

கணக்கெடுப்பின் போது முக்கூர்த்தி தேசிய பூங்காவின் வெஸ்டர்ன் கேட்ச்மென்ட்-II பகுதியில் ஒரு கட்டியால் பாதிக்கப்பட்ட நீலகிரி வரையாடு ஆவணப்படுத்தப்பட்டது. நீலகிரி வரையாடுகள் சராசரி கடல் மட்டத்தில் இருந்து 247மீ முதல் 2643மீ வரையிலான உயரங்களில் ஆவணப்படுத்தப்பட்டன. நீலகிரி வரையாடுகளின் ஆண்-பெண் விகிதம் 1:2 என மதிப்பிடப்பட்டது, அதே நேரத்தில் தாய்-சேய் விகிதம் 2:1 ஆகும்.

நீலகிரி வரையாடுகளின் இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பின் முடிவுகள் பாதுகாப்பு திட்டமிடல், விலங்கின் சுற்றுச்சூழல் நிலையைப் புரிந்து கொள்ளுதல், மேலாண்மை நடைமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கும் முக்கியமான தரவுகளாக செயல்படுகின்றன. நீலகிரி வரையாடுகளின் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு, பல ஆண்டுகளின் எண்ணிக்கை மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.