Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

12,480 ஊராட்சிகளில் நடந்த கிராம சபையில் 3 அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 12,480 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மூன்று அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ்நாட்டின் ஊரக உள்ளாட்சிகளில் மிக முக்கிய ஜனநாயக நிகழ்வாக கருதப்படும் கிராம சபை கூட்டங்கள், மாநிலம் முழுவதும் உள்ள 12,480 ஊராட்சிகளில் நேற்று காலை 11 மணியளவில் சிறப்பாக நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், கிராம சபைகள் மக்களாட்சியின் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது என வலியுறுத்தி, மக்களின் தேவைகள், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி ஊரக வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் - கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் - முள்ளிக்குளம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களும், கோயம்புத்தூர் மாவட்டம் - வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்டம் - கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் - திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் முதல்வருடன் கலந்துரையாடினர். கிராமசபை கூட்டத்தில், மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான மூன்று அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. மேலும், சமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு, இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப்பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது இடங்களில் காணப்படும் பெயர்களை நீக்கி, புதிய பொருத்தமான பெயர்களை சூட்டுதல் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘தாயுமானவர் திட்டம்’ கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு, நலிவு நிலை குறைப்பு திட்டம் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,

* ‘நம்ம ஊரு, நம்ம அரசு’ என்ற தலைப்பின் கீழ் கண்டறியப்பட்ட திட்டங்கள் தேவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பது,

* கிராம ஊராட்சிகளில் 1.4.2025 முதல் 30.9.2025 முடியவுள்ள காலத்திற்கு நிர்வாகம் மற்றும் பொது நிதிச்செலவினம்,

* கிராம ஊராட்சியின் 2024-25ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை,

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வரவு மற்றும் பணி முன்னேற்றம்,

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்,

* தூய்மை பாரத இயக்க (ஊரகம் 2.0) திட்டம்,

* ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்,

* கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது,

* வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது,

* அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரும் இல்லை என்பது குறித்து நடவடிக்கைகள்,

* தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் குறித்தும்,

* தேர்வு செய்யப்பட்டுள்ள 7,515 கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை குறித்த வீடியோ / ஆடியோ பதிவுகளை சபாசார் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது,

* 2025-26ம் ஆண்டின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள கிராம சபையின் ஒப்புதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டன.