122 தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர் பீகாரில் 67 சதவீத வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
பாட்னா: பீகாரில் இரண்டு கட்ட தேர்தலிலும் சேர்த்து மொத்தம் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகிறது. ஆட்சி அமைப்பது யார் என்பது அன்று தெரிய வரும். முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கும் பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நவ.6ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 65.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீதம் உள்ள 122 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் சுமார் 3.70 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 45,399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு
இருந்தன. இந்த தேர்தலில் 136 பெண்கள், 8 அமைச்சர்கள் உட்பட மொத்தம் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 4 லட்சம் பாதுகாப்பு ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேபாள எல்லையில் உள்ள மேற்கு மற்றும் கிழக்கு சம்பாரண், சீதாமர்ஹி, மதுபானி, சுபால், அராரியா, கிஷன்கஞ்ச் மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கிஷன்கஞ்ச், பூர்னியா, கட்டிஹார், ஜமுய், கயா மாவட்டங்களில் அதிக மக்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். இரண்டாம் கட்டத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பீகார் மாநில பொறுப்புத் தலைவர் சஞ்சய் ஜா, ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், பீகார் தொழில்துறை அமைச்சர் நிதிஷ் மிஸ்ரா, பூர்னியா எம்.பி. பப்பு யாதவ், பாஜவின் ஜமுய் வேட்பாளர் ஷ்ரேயாஷி சிங், போஜ்புரி பாடகர் பவன் சிங்கின் மனைவியும் சுயேச்சை வேட்பாளர் ஜோதி சிங், பாஜ மூத்த தலைவர் ஷான்வாஸ் உசேன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜீத் சர்மா ஆகியோரும் வாக்களித்தனர்.
பீகாரின் நவாடா மாவட்டத்தில் வாரிசலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடியில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அங்கு சென்று அமைதியை ஏற்படுத்தினார்கள். அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு வாகனம் சேதமடைந்ததாக தகவல் பரவியது.
சேதமடைந்த வாகனம் ஒரு தனியார் வாகனம் என்றும் அதற்கும் தேர்தல் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நவாடா காவல் கண்காணிப்பாளர் அபினவ் திமான் கூறினார் இதே போல் சீதாமர்ஹி மாவட்டத்தில் ரன்னிசைட்பூர் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி எண் 270க்குள் தனது கட்சி வேட்பாளரின் துண்டுப் பிரசுரங்களை வாக்குப்பதிவின் போது விநியோகித்ததாகக் கூறப்படும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வாக்குச்சாவடி முகவர் கவுதம் குமார் மீது மாதிரி நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதே போல் அவுரங்காபாத் மற்றும் அராரியாவில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே மோதல்கள் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. சிறு சிறு மோதல்களை தவிர பெரும்பாலான பூத்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்தது. அப்போது 68.74 சதவீத வாக்குகள் பதிவானது. முதற்கட்ட தேர்தலிலும் 65 சதவீத வாக்குகள் பதிவானதால் இரண்டு கட்டத்திலும் சேர்த்து பீகார் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படும். அப்போது பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.
* தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: பா.ஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
பீகார் தேர்தலில் பா.ஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. மொத்தம் உள்ள 243 இடங்களில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 140க்கும் மேற்பட்ட இடங்களையும், இந்தியா கூட்டணி 90 இடங்களையும் பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜன்சுராஜ் கட்சிக்கு பெரிய அளவில் வெற்றி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
கணிப்புகள் பா.ஜ கூட்டணி இந்தியா கூட்டணி மற்றவர்கள்
1. ஜேவிசி 135-150 88-103 3-6
2. மேட்ரிஸ் 147-167 70-90 2-10
3. பீப்பிள் இன்சைட் 133-148 87-102 3-6
4. பீப்பிள் பல்ஸ் 133-159 75-101 2-13
5. டைனிக் பாஸ்கர் 145-160 73-91 5-10
6. பிஎம்ஏஆர்கியூ 142-162 80-98 1-7
* எந்த கட்சிக்கு எவ்வளவு?
பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பா.ஜ மட்டும் தனிப்பெரும் கட்சியாக 69 இடங்களையும், லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் 63 இடங்களையும், முதல்வர் நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 62 இடங்களையும் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியால் தான் இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மாற்றம் தேவை: பிரசாந்த் கிஷோர்
பிரபல அரசியல் வியூக நிபுணரும், ஜன்சுராஜ் கட்சி நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் நேற்று ரோஹ்தாஸ் மாவட்டத்தின் கர்கஹார் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில்,’ பீகார் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளோ அல்லது தங்கள் சுற்றுப்புறங்களுக்கோ நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் சொந்த முன்னேற்றத்திற்காக, வெளியே சென்று, தங்கள் வாக்குச் சாவடிகளை அடைந்து, மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், மாநிலம் இன்னும் ஐந்து ஆண்டுகள் பரவலான ஊழல், வேலையின்மை மற்றும் கட்டாய இடம்பெயர்வைத் தாங்க வேண்டியிருக்கும்’ என்றார்.
* புதிய ஆட்சி அமைக்க லாலு கட்சியுடன் நிதிஷ் ரகசிய பேச்சா?
பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் புதிய ஆட்சி அமைப்பது குறித்த கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் நேற்று பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் வார் ரூமிற்கு சென்று வாக்குப்பதிவு குறித்து முதல்வர் நிதிஷ்குமார் ஆய்வு செய்தார். ஒன்றிய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலனை சந்தித்த பிறகு அவர் கட்சி அலுவலகத்திற்கு சென்றார். இதற்கிடையில் தேர்தலுக்கு பிந்தைய முடிவு குறித்தும், புதிய ஆட்சி அமைப்பது குறித்தும் ஒரு ரகசிய ஒப்பந்தத்திற்காக தனது வீட்டில் லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதை ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் மறுத்தார். அவர் கூறுகையில்,’ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கும் வாக்காளர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியால் பரப்பப்படும் வதந்திகளை நாங்கள் கண்டிக்கிறோம். வதந்திகளைப் பரப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகள் உருவாக்க முயன்ற பொய்யான கதை மிகவும் வெட்கக்கேடானது, துரதிர்ஷ்டவசமானது. இது அவர்களின் விரக்தியைக் காட்டுகிறது. அவர்கள் தோல்வியை எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார்.
