* ஸ்வெட்டர் கம்பெனியில் வேலை பார்த்தனர்
* ஒருவரிடம் போலி ஆதார் கார்டு சிக்கியது
சேலம் : சேலத்தில் கடந்த ஓராண்டிற்கும் மேல் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஒருவரிடம் இருந்து போலி ஆதார் கார்டை பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாநகர் சூரமங்கலத்தை அடுத்துள்ள மல்லமூப்பம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில், தனியார் ஸ்வெட்டர் கம்பெனி இயங்கி வருகிறது.
இந்த ஸ்வெட்டர் கம்பெனியில் வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சேலம் மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், துணை கமிஷனர் கேழ்கர்சுப்பிரமணிய பாலசந்திரா தலைமையில் உதவி கமிஷனர் ரமாளிராமலட்சுமி, சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம், அந்த ஸ்வெட்டர் கம்பெனிக்கு சென்று, அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு ஸ்வெட்டர் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், ஒரு பெண் உள்பட 12 பேர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து இங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. உடனே அந்த 12 பேரையும் போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், மாஜ்ஹாருல் (36), ராசிப்ஷேக் (23), அவரது மனைவி சுபிபேகம் (21), கசம்கான் (43), ரசூல் (28), யூசுப்கான் (29), அமீன்ஹலாதர் (30), முகமது ரபிகுல் இஸ்லாம் (31), நஜ்ருல் இஸ்லாம் (45), நஜ்முல் உசேன் (40), பராத்உசேன் (35), வைசால் (28) எனத்தெரியவந்தது. இவர்கள், கடந்த ஓராண்டிற்கு முன் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவி, சேலத்திற்கு வந்துள்ளனர்.
இங்கு, கன்னங்குறிச்சி கோம்பைக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஸ்வெட்டர் கம்பெனியில் வேலை பார்த்த வங்கதேசத்தை சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் தங்கியிருந்து வெளியில் வேலை பார்த்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த 12 பேரும் தனியாக மல்லமூப்பம்பட்டிக்கு வந்த அங்குள்ள தனியார் ஸ்வெட்டர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு சூப்பர்வைசராக மாஜ்ஹாருல் இருந்துள்ளார். இவர் தான், மற்ற அனைவரையும் ஒருங்கிணைத்து தங்க வைத்துள்ளார், என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 12 பேரில் ஒருவரிடம் இருந்து போலி ஆதார் அடையாள அட்டை சிக்கியது. திருப்பூர் முகவரியில் எடுக்கப்பட்ட அந்த ஆதார் அடையாள அட்டையை எடுத்துக்கொடுக்க உதவியது யார்?, அங்கு வங்கதேசத்தை சேர்ந்த வேறு நபர்கள் தங்கியிருக்கிறார்களா?, இவர்கள் மேற்குவங்கம் வழியே வந்தார்களா? அல்லது கடல் மார்க்கமாக படகில் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான 12 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
