மத உணர்வுகளுக்கு முன்னுரிமை புகார்; விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு தடை: ஒன்றிய அரசின் முடிவுக்கு கண்டனம்
புதுடெல்லி: விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது எதிர்க்கட்சிகளிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் விலங்குகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 11 உயிர் உரங்களுக்கான ஒப்புதலை ஒன்றிய வேளாண் அமைச்சகம் திரும்பப் பெற்றுள்ளது. கோழி இறகுகள், பன்றி மற்றும் மாடுகளின் திசுக்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உரங்கள், பயிர்களில் பயன்படுத்தப்படுவதற்கு இந்து மற்றும் சமண மதக் குழுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 1985ம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டு ஆணையைத் திருத்தி, விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படும் புரத ஹைட்ரோலைசேட்டுகளை நீக்கி, நேற்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதரீதியான சர்ச்சைகளைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. சோயா, மக்காச்சோளம் போன்ற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிர் உரங்களுக்குத் தடை இல்லை. அறிவியல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பொருளுக்கு, மத உணர்வுகளைக் காரணம் காட்டி தடை விதிப்பது அபாயகரமான முன்னுதாரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாஜக அரசு, தனது அரசியல் ஆதாயத்திற்காக மத உணர்வுகளுடன் விளையாடுவதாகவும், விவசாயிகளின் நலன்களைப் புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்புதான் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இந்த உரங்களுக்கு அறிவியல் பூர்வமான ஒப்புதல் அளித்திருந்தது.
பல ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத, தரம் குறைந்த உயிர் உரங்கள் சந்தையில் விற்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு கொண்டு வந்த நிலையில், திடீரென தற்போது பின்வாங்கியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.