Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10ம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் இன்று பிற்பகல் முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் உடனடியாக தேர்வு எழுதும் வகையில் ஜூலை மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. துணைத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்கள் இன்று மதியத்துக்கு பிறகு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி மற்றும் தேர்வு எண் ஆகியவற்றை பதிவு செய்து, தாங்கள் விண்ணப்பித்து இருந்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இரு நகல்கள் எடுத்து 18, 19ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக எண்களம் மேற்கண்ட இணைய தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். மறு மதிப்பீடு செய்ய பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505ம் மறுகூட்டல் செய்ய பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும்.