Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

10, பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. அதற்கு முன்னதாக 8ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு முடிவும் வெளியானது. இந்நிலையில் மேற்கண்ட தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்கள் மீண்டும் அந்த தேர்வுகளை எழுதுவதற்கு வசதியாக ஜூலை மாதம் துணைத் தேர்வுகள் நடத்த தேர்வுத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது.

துணைத் தேர்வுகள் ஜூலை 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது. மேற்கண்ட துணைத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் மே 22ம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் மாதம் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் அவர்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விரும்புவோர் மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம், இணையதள பதிவுக் கட்டணம் ஆகியவற்றை பணமாக செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5 மற்றும் 6ம் தேதிகளில் பள்ளி சேவை மையங்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். அதன்படி 10ம் வகுப்புக்கு கட்டணம் ரூ.500, பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1000, என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணைத் தேர்வுக்கான அட்டவணை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரங்கள், தனித் தேர்வர்களுக்கான தகுதிகள், அறிவுரைகள் www.dge.in.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.