108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்குதலுக்கு ஐகோர்ட் கண்டனம்: யார் ஈடுபட்டிருந்தாலும் வழக்குப்பதிவு செய்ய அதிரடி உத்தரவு
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18ம் தேதி வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதி மற்றும் கடந்த மாதம் 24ம் தேதி பிரசாரம் செய்யும் போது நோயாளிகளை ஏற்ற சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அதிமுகவினர் தாக்கினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பைலட்கள் மற்றும் அவசர மருத்துவ தொழில்நுட்ப ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதிபடுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் 2 இடங்களில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே, சட்டமன்ற தேர்தல் முடியும் வரையிலாவது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கூறப்பட்டது. அரசு தரப்பில், திருச்சி, வேலூர் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே இதுபோல செய்து வருகின்றனர் என கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘மனுதாரர் கோரிக்கை தீவிரமானது. இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதனை பொதுவான நிகழ்வாக எப்படி எடுத்துக்கொள்வது?. ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. எனவே, தாக்குதலில் யார் ஈடுபட்டிருந்தாலும் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட காவல் துறையும் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து டிஜிபி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை செப்.12க்கு தள்ளி வைத்தனர்.