Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

100% நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மோடி தொடங்கி வைத்தார்: தொலை தொடர்பு உபகரண உற்பத்தியில் புதிய சாதனை

ஜார்சுகுடா: நாடு முழுவதும் பிஎஸ்என்எல்லின் சுதேசி 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொலைதொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

ஒன்றிய பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனாலும் சுமார் 30 ஆயிரம் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் 4ஜி சேவை வழங்கப்படாமல் இருந்தது.

அப்பகுதிகளிலும் 4ஜி சேவையை வழங்க ரூ.37 ஆயிரம் கோடி செலவில் 97,500 மொபைல் 4ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டன. இவை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. இந்நிலையில், பிஎஸ்என்எல்லின் வெள்ளி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட சுமார் 1 லட்சம் மொபைல் 4ஜி கோபுரங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாடு முழுவதும் 100 சதவீத பிஎஸ்எல்என் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையை பெற முடியும். ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடந்த வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்க விழாவில், பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் உள்நாட்டு தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் டென்மார்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நெட்வொர்க் கிளவுட் அடிப்படையிலானது. மேலும் இதை 5ஜி சேவைக்கு தடையின்றி மேம்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல்லில் இணைவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த கோபுரங்கள் சூரிய சக்தியில் இயங்கக் கூடியவை.

* காங். மீது தாக்கு

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் ரூ.60 ஆயிரம் கோடி வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘காங்கிரஸ் கட்சி மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் மீது கூட வரி விதித்தது. இந்த வரம்பை பாஜ அரசு ரூ.12 லட்சத்திற்கு மேல் உயர்த்தி உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மக்களைக் கொள்ளையடிப்பவர்கள். அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்தபோது, நாடு முழுவதும் விலைகள் குறைந்தன. ஆனால் இந்த நிவாரணத்தை சாமானிய மக்களுக்கு வழங்க விரும்பாமல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு தனது சொந்த வரியை விதித்துள்ளது’’ என்றார்.