*முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனை
புதுச்சேரி : புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் மீண்டும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 25க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி நெல்லித்தோப்பு மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சென்றனர். உருளையன்பேட்டை தொகுதி கோவிந்தசாலை, நெல்லித்தோப்பு பகத்சிங் வீதியை சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் கான்வெண்ட் வீதி, பள்ளி வாசல் வீதி, ராஜா நகர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த மேலும் 25க்கும் மேற்பட்டோர் கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபனை சந்தித்து, உரிய சிகிச்சைகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணனை சட்டசபையில் சந்தித்து குடிநீரில் கழிவு நீர் கலக்கும் விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பழைய குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்ற வேண்டும் என ஓம்சக்தி சேகர் வலியுறுத்தினார்.
அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை அழைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்துமாறும், விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதற்கிடையே சாரம் பகுதியில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் போது, குடிநீர் குழாயை சேதப்படுத்தியதும், இதன் மூலம் கழிவு நீர் கலந்திருப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் 2 பேர் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்து இறந்திருப்பதும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், இவ்விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, புதுச்சேரி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மாசு கலந்த குடிநீர் குடித்து பொதுமக்கள் உயிரிழக்கும் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சட்டசபை கேபினட் அறையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதில், புதுச்சேரியில் 450 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளது, எங்காவது பிரச்னை என்றால், உடனே துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.