Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி மும்முரம் பயிர் கடன் வழங்கும் பணியை தொடங்காத வங்கிகள்

*காப்பீடு செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா, தாளடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தயக்கம் இன்றி பயிர்கடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக முதல்வர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட்டார். உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடந்தது.

இதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்து கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறுவை அறுவடை செய்த மகிழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் சம்பா 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளான திருமருகல், கீழையூர், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர் ஆகிய பகுதிகளில் நேரடி விதைப்பு மற்றும் நடவுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 1 லட்சம் ஏக்கரில் நடவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கமல்ராம் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் குறுவை இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. ஆனால் அறுவடை காலத்தில் மழை பெய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து பயிர்கள் நாசமானது.

இது குறித்து கணக்கெடுப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை. ஆனால் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பணியில் விவசாயிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். மழை ஓய்ந்து விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதால் மாவட்டத்தில் அதிக அளவில் சம்பா, தாளடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள எளிதாக உள்ளது.ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்க மறுக்கப்படுகிறது.

அதே போல் டிஏபி உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை எல்லாம் தாண்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்களில் பயிர் கடன் இன்னும் வழங்கும் பணியை தொடங்கவே இல்லை. நவம்பர் மாதம் இறுதிக்குள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்க வேண்டும். இன்னும் குறுகிய காலமே இருப்பதால் எப்பொழுது கடன் வழங்கும் பணியை தொடங்குவார்கள் என தெரியவில்லை.

அதே போல் பயிர் காப்பீடு வரும் 15ம் தேதிக்குள் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய மறுகின்றனர். இ சேவை மையங்களில் சென்று செய்து கொள்ளவும் என வற்புறுத்துகின்றனர்.

இது விவசாயிகளை மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. கடன்கள் கொடுக்க மறுப்பதால் வேறு வழியின்றி வெளி நபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே நடப்பு சம்பா மற்றும் தாளடி இலக்கை அடைய விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.