Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருப்பூரில் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தி நிர்ப்பந்தத்தால் பாஜவுடன் கூட்டணி வருத்தம் அளிக்கிறது: மாஜி எம்எல்ஏ, கவுன்சிலர் கண்ணீர்

திருப்பூர்: பாஜவுடன் நிர்ப்பந்தத்தால் கூட்டணி அமைத்தது வருத்தம் அளிக்கிறது என்று திருப்பூரில் நடந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ, கவுன்சிலர் கண்ணீர் விட்டபடி தெரிவித்தனர். பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சிலர் எதிர்ப்பை எப்படி வெளியில் சொல்வது? என்று மனதுக்குள்ளேயே புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூரில் அதிமுக-பாஜ கூட்டணிக்கான எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். இதில் பேசிய முன்னாள் அதிமுக எம்எல்ஏவும், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன், அதிமுக-பாஜ கூட்டணி அமைந்தது வருத்தம் எனவும், கடந்த முறை பாஜ-அதிமுக கூட்டணி ஏற்பட்டபோது இஸ்லாமியர்கள் வருத்தமடைந்த நிகழ்வுகள் குறித்தும் கண்ணீர் விட்டபடி கூறினார்.

மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் இடைமறித்தபோது, குணசேகரன் இந்த சப்ஜெக்ட்டை மட்டும் பேசி முடித்துக்கொள்வதாக கூறிவிட்டு பேசுகையில், ‘‘அதிமுக-பாஜ கூட்டணி அமைந்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி அமைந்தபோது இஸ்லாமிய சகோதரர்கள் வருத்தமடைந்து வேலை செய்ய மாட்டோம் என்றீர்கள். நமக்கு இயக்கம் முக்கியம். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலரும், பகுதி செயலாளருமான கண்ணப்பன் நிர்ப்பந்தத்தால் அதிமுக-பாஜ கூட்டணி அமைந்ததாக தெரிவித்தார். அவர் பேசும்போது, ‘‘துரோகிகள் காரணமாக கட்சி சுக்கு நூறாக உடைந்து நான்கைந்து பாகங்களாக உள்ளது. கட்சியை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தால் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. என் உயிருள்ளவரை இஸ்லாமியர்களுக்கு துணை நிற்பேன். மாவட்ட செயலாளர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இங்குள்ள நிலவரத்தை தெளிவாக கூறி இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்ன செய்தது?, இஸ்லாமியர்களுக்கு துணை நிற்போம் என அறிக்கை வெளியிட வேண்டும்’’ என கண்ணீர் மல்க பேசினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘இது என் ஆதங்கம். என் ஆதங்கத்தை கூறாவிட்டால் கிளை செயலாளர்கள் பணி செய்ய மாட்டார்கள்’’ என்றார். தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாமன்ற உறுப்பினர் அவர்களது பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால் கடந்த கால அனுபவங்களை பேசியுள்ளனர்’’ என்றார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.