திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர் உள்பட பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா: காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத முதல் கிருத்திகை விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக, ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் மலைக்கோயிலில் குவிந்தனர். மேலும், பொது மற்றும் சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, தங்க கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் குறைவான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாகனங்களும் மலையடிவாரத்தில் நிறுத்தப்பட்டு, கோயில் பேருந்துகளிலும் பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும், விஐபி கேட் பகுதியில் தரிசிக்க வரும் பக்தர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட பலர் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதேபோல் சென்னை அருகே உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் இன்று ஆடி மாத கிருத்திகை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பரணி தினமான நேற்று மாலை முதல் சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு கிருத்திகை தின தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, சரவணப் பொய்கையில் நீராடி, மொட்டை அடித்து பால் காவடி, புஷ்ப காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி எடுத்து, மாடவீதிகளில் உலாவந்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்று ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றிரவு 7 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதேபோல் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் இன்று ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் காவடி எடுத்தும் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். வல்லக்கோட்டை முருகன் கோயில், சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் குன்றத்தூர் முருகன் கோயில்களில் இன்று ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தன. மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து, பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து வழிபட்டனர்.