Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2021ல் அடிமைகளை விரட்டியதுபோல எஜமானர்களை விரட்ட வேண்டும்; 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆ.ராசா மீது 2 ஜி பொய் வழக்கு போடப்பட்டு பல்வேறு தொல்லைகள் கொடுத்தனர். ஆனால், அவர் தனி ஆளாக நின்று வழக்காடி வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்.

10 ஆண்டுகள் தமிழ்நாட்டு பக்கம் வராத மோடி, தற்போது தேர்தல் என்பதால், தமிழ்நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டாது. இஸ்லாமியர்கள் பாதிக்கக்கூடிய சிஏஏ சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வர அனுமதிக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். நமது கல்வி உரிமையை பறித்து விட்டனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தமிழ்நாட்டு மக்களுக்கு நீட் தேர்வு வேண்டாம் என்றால், அதனை தமிழ்நாட்டில் கொண்டு வரப்படாது என உறுதியளித்துள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். மாநில அரசிடம் இருந்து ஜிஎஸ்டி வசூல் செய்யும் ஒன்றிய அரசு அதனை திரும்பி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்திற்கு ₹3, பீகாருக்கு ₹7 திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என 2019ல் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அங்கு மருத்துவமனை கட்டப்படவில்லை. இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை. அங்கு ஒரே ஒரு செங்கல் மட்டுமே வைக்கப்பட்டது. அதனையும் நான் தூக்கிக்கொண்டு வந்து விட்டேன்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் சசிகலா காலில் தவழ்ந்து சென்று விழுந்து பதவி பெற்ற எடப்பாடி அந்த அம்மா காலையே வாரி விட்டு துரோகியானார். தொடர்ந்து, பதவியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதல்வர் கைகாட்டுபவர்தான் பிரதமர். அவ்வாறு பிரதமரானால் திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

எனவே, இந்தியாவை காப்பாற்ற நல்ல பிரதமர் வர வேண்டும் என்றால், நீங்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்து 29 பைசா ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். 2021ல் சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை ஓட ஓட விரட்டியடித்தீர்கள். அது போலவே, அவர்களின் எஜமானர்களை இந்த தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.