Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.27 லட்சம் வாங்கிய ஆஸ்திரேலிய வாலிபர் உள்பட 3 பேரை கடத்தி தாக்கி சித்ரவதை: சேலத்தில் 9 பேர் கும்பல் கைது

சேலம்: சேலம் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.27 லட்சம் வாங்கிய ஆஸ்திரேலிய வாலிபர் உள்பட 3 பேரை கடத்தி ஓட்டல் அறையில் அடைத்து தாக்கிய 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சேலம் அழகாபுரம் கான்வென்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (29). ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள இவர், அவரது மாமா அந்தோணிராஜ் வீட்டில் தங்கியிருக்கிறார். தொழில் தொடர்பாக வெங்கடேஷ் சேலம் வந்துள்ளார். அப்போது கன்னங்குறிச்சியை சேர்ந்த மகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், கோவை காரமடையில் 15 பிளாட் போட்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த பிளாட்டுகளை ரூ.2 கோடியே 38 லட்சத்திற்கு வெங்கடேஷ் விலை பேசியுள்ளார். ஆஸ்திரேலியன் டாலர் தன்னிடம் இருப்பதாக கூறிய வெங்கடேஷ், அதனை மகேந்திரன் அனுப்பிய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து அனுப்பியுள்ளார். ஆனால் பணம் வந்துசேரவில்லை. இதற்கிடையில் மகேந்திரனிடம் ரூ.27 லட்சம் அவசரமாக தேவைப்படுவதாக கூறி வெங்கடேஷ் பெற்றுள்ளார். பின்னர் அவர், நண்பர் எபிநேசர், மாமன் மகன் டோனி ஆகியோருடன் சேலத்தில் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் வங்கி கணக்கிற்கு பணம் வராததால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன், தன்னிடம் ரூ.27 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக கருதினார். இதையடுத்து வெங்கடேஷ் தங்கியிருந்த ஓட்டலுக்கு மகேந்திரன், அவரது கூட்டாளிகள் கும்பலாக சென்றனர். வாங்கிய பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என கூறி தகராறில் ஈடுபட்டதுடன், சரமாரி தாக்குதல் நடத்தினர். எபிநேசர், டோனி ஆகியோருக்கு பீர் பாட்டில் அடி விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் வெளியே போகுமாறு கூறினர். இதையடுத்து வெங்கடேஷ், எபிநேசர், டோனி ஆகியோரை காரில் ஏற்றி அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஓட்டலுக்கு கொண்டுவந்து அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். பணத்தை கொடுக்க வில்லை என்றால் கொன்றுவிடுவோம் என மிரட்டியதால், ஆஸ்திரேலியாவில் உள்ள வெங்கடேசின் தாய் செல்விக்கு போன் செய்து கூறினார். உடனே அவர் அழகாபுரம் போலீஸ் ஸ்டேசனை தொடர்பு கொண்டுகூறினார். உடனடியாக போலீசார் செல்போன் டவரை வைத்து விசாரித்து, ஓட்டல் அறைக்கு சென்று அதிரடியாக 3 பேரையும் மீட்டனர். காயம் அடைந்த அவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுதொடர்பாக கன்னங்குறிச்சி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அரிசிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (49), முருகன் (31), அருண் பிரபாகரன்(29), மகேந்திரன்(53), கார்த்தி(29) விஜய்இருதயராஜ் (32), சதிஷ் பாண்டியன்(25), தினேஷ்குமார்(28), பிரவீன்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.